2019- 20 ஆம் ஆண்டு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம் தேவைப்படும் பட்சத்தில் புதிய தேர்வு குழு அமைத்து விசாரணை நடத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக கலை மற்றும் பண்பாடு துறை மூலமாக இளைஞர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக்கலை கற்பிக்கப்படுகிறது.
தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, எந்தவித தகுதியோ, எந்தவித நெறிமுறையோ இன்று வரை வகுக்கப்படவில்லை.
2019-2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20.02.2021 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. இதில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கிய சான்றிதழில் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசரக் கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, 2019 – 2020 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது 2021-ல் வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2021 ஆம் ஆண்டு கலைமாமணி விருது முந்தைய அரசால் வழங்கப்பட்டது.
இதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டியின் அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலமுருக பாண்டி, கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக அவசரகதியில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது விழா சான்றில் முறையான கையெழுத்து கூட இல்லை எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மகாதேவன்
சத்தியநாராயண பிரசாத் அமர்வு, 2019-20 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா?.
தேவைப்படும் பட்சத்தில் புதிய தேர்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த தேர்வுக் குழு ஏற்கனவே வழங்கப்பட்ட 2019-20 விருது பெற்றவர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய அனைத்து தரப்பினருக்கும் உரிய வாய்ப்பளித்து பரிசீலனை செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தனர்.
கலை.ரா
பணமதிப்பழிப்பு: நீதிபதி நாகரத்னா சரமாரிக் கேள்வி!
செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும்: இபிஎஸ்