ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் உரையாற்றி திரும்பிய பின்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தனது தூதரகத்திற்கு திரும்பிய போது நியூயார்க் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது அமர்வு கூட்டம் (செப்டம்பர் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களும் அமெரிக்காவில் குவிந்தனர். இதன் காரணமாக நியூயார்க் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில் ஐநா கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது நியூயார்க்கில் பொது போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஐநா விவாதத்தில் பங்கேற்க வந்த இமானுவேல் மேக்ரோனின் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிறிது நேரம் காரில் காத்திருந்த பின்னர் காரை விட்டு வெளியே வந்த பிரான்ஸ் அதிபர் என்ன நடக்கிறது என்பது குறித்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தார். அவர் “மன்னிக்கவும் அதிபரே, தற்போது சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நியூயார்க் மக்கள் கூட்டம் பார்த்துக் கொண்டிருக்க வேடிக்கையாக டிரம்ப்பை தொலைபேசியில் அழைத்தார் மேக்ரோன். டிரம்பிடம்.. ’நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்ன நடந்தது என்று தெரியுமா? உங்களுக்காக நான் இங்கு சாலையில் காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் உங்களுக்காக சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன’ என்று சிரித்தவாறு கூறினார். பின்னர் டிரம்பின் கான்வாய் கடந்து சென்ற பிறகு சாலைகள் திறந்து விடப்பட்ட நிலையில் மேக்ரோன் மீண்டும் காரில் செல்லாமல் டிரம்பிடம் பேசிக்கொண்டே நடந்து சென்றார்.
பொதுவாக அதிபர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் சாதாரண மக்களை போலவே அவர் நடந்து சென்றது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மக்களுக்கு பெரும் வியப்பை தந்தது. மேக்ரோன் நடந்து சென்ற போது பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து நியூயார்க் காவல்துறை அதிகாரிகள் தரப்பில், ஐநாவில் உள்ள தலைமையகத்துக்கு அமெரிக்க அதிபர் செல்லும் போதெல்லாம் தலைமையகத்தைச் சுற்றி பாதுகாப்பு கருதி போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவது வழக்கம்தான். இதுதான் திங்கள் கிழமையும் நடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக தெரிவித்தார். மேலும் ’காசாவில் நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும். இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் ஏதாவது செய்யக் கூடிய நபராக டிரம்ப் உள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் போர் உள்ளிட்ட உலக நாடுகளிடையேயான 7 போர்களை நிறுத்தியவன் நான் என்றும், எனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்றும் டிரம்பு கூறியது குறிப்பிடத்தக்கது.