புவிசார் அரசியல் பதட்டங்கள், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள் மற்றும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருதல் ஆகியவற்றிற்கு மத்தியில், ஜூன் மாதத்தின் முதல் பாதியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPIs) இந்திய பங்குச் சந்தையிலிருந்து ரூ.62,853 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இந்த சமீபத்திய வெளியேற்றங்களுடன் சேர்த்து, 2026ஆம் ஆண்டில் இதுவரை இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறிய மொத்த FPI முதலீட்டின் அளவு ரூ.2.87 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இது 2025ஆம் ஆண்டு முழுவதும் வெளியேறிய ரூ.1.66 லட்சம் கோடி என்ற அளவை விட அதிகமாகும். இந்தத் தரவுகள் ‘நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்’ (NSDL) அமைப்பின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இதுகுறித்து பஜாஜ் ப்ரோக்கிங் (Bajaj Broking) நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு துணைத் தலைவர் பபித்ரோ முகர்ஜி கூறுகையில், வரும் வாரத்தில் FPI முதலீட்டுப் போக்கு என்பது அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்க ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் (FOMC) வட்டி விகித முடிவு, ஜப்பானிய மத்திய வங்கியின் கொள்கை மற்றும் பிற முக்கிய மத்திய வங்கிகளின் கருத்துக்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் என்கிறார்.
பிப்ரவரி மாதத்தைத் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் விற்பனை நடைபெற்றுள்ளது
NSDL தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தைத் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் FPI-கள் நிகர விற்பனையாளர்களாகவே (net sellers) இருந்துள்ளனர். ஜனவரி மாதத்தில் அவர்கள் ரூ.35,962 கோடியை வெளியேற்றினர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் ரூ.22,615 கோடி முதலீடு செய்யப்பட்டது. இது கடந்த 17 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாதாந்திர முதலீடாகும். இருப்பினும், மார்ச் மாதத்தில் இந்த நிலை முற்றிலும் மாறியது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சாதனை அளவாக ரூ.1.17 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்றனர்.
ஏப்ரல் மாதத்தில் ரூ.60,847 கோடியும், மே மாதத்தில் ரூ.32,963 கோடியும் வெளியேற்றப்பட்டன. ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் ரூ.62,853 கோடி வெளியேற்றப்பட்டுள்ளது. வட்டி விகிதங்களின் போக்கு, புவிசார் அரசியல் நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய வளர்ச்சி ஆகியவை குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலிலேயே முதலீட்டாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய காலகட்டங்களில், முதலீட்டாளர்கள் பெரும்பாலும் அபாயத்தைக் குறைப்பதற்காக வளர்ந்து வரும் சந்தைகளிலிருந்து (emerging markets) நிதியை வெளியேற்றி, வளர்ந்த சந்தைகளுக்கு (developed markets) அல்லது பாதுகாப்பான சொத்துக்களுக்கு மாற்றுகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
