அம்மாவின் ஆன்மா யாரை துரத்துகிறது பார்த்தீர்களா? – எடப்பாடி விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

உண்மையாக இருப்பவர்களை எல்லாம் அம்மாவின் ஆன்மா ஆசீர்வாதம் செய்துகொண்டிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி மனோஜ் பாண்டியனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது வரும் தேர்தல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவுக்கும் இடையேயான தேர்தல் என்று முதலமைச்சர் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,“நான் ஏற்கனவே சொன்னது போல, திறமையற்ற முதலமைச்சர். அவர் திமுகவிற்குத் தலைவராக இருப்பதே ஒரு வேதனைதான். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

இப்போது என்ன தேர்தல் நடக்கிறது இது? தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு நடக்கும் தேர்தல். புரிந்துகொண்டீர்களா? திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.. எங்களுடைய கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கிறது. அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதற்கு மேல் என்ன வேண்டும் சொல்வதற்கு? எதுவும் இல்லை. எங்கள் மீது புகார் சொல்வதற்கு ஸ்டாலினிடம் சரக்கு இல்லை. அதனால் வேறு ஒருவரைப் பிடித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இங்கு ஆள்வது அதிமுக என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. எங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.. நாங்கள் பதில் சொல்லத் தயார். முடியலையே.. இருந்தால் தானே சொல்ல முடியும்” என்றார்.

ADVERTISEMENT

கோடநாடு வழக்கில் “அம்மாவின் ஆன்மா உங்களைத் துரத்திக்கொண்டே இருப்பதாக” மனோஜ் பாண்டியன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு,“அம்மாவின் ஆன்மா துரத்தியதால்தான் மனோஜ் பாண்டியன் அங்கே ஓடிவிட்டார். ஆன்மா யாரைத் துரத்துகிறது என்று பார்த்தீர்களா? உண்மையாக இருப்பவர்களை எல்லாம் அம்மாவின் ஆன்மா ஆசீர்வாதம் செய்துகொண்டிருக்கிறது. இங்கு இருந்த யார் யாரெல்லாம் தவறு செய்தார்களோ, யார் யாரெல்லாம் இந்த இயக்கத்திற்குத் துரோகம் செய்தார்களோ—அவர்களை எல்லாம் அம்மாவின் ஆன்மா ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

ஒட்டுமொத்த என்.டி.ஏ. கூட்டணியும் பிளாக்மெயில் செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டணி என்ற கேள்விக்கு,“அவர் நினைத்துக்கொண்டு கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் கேட்காதீர்கள். அவரிடம்தான் திருப்பிக் கேட்க வேண்டும்.

ADVERTISEMENT

தேசிய ஜனநாயக கூட்டணி இந்த நாட்டை ஆளும் கட்சி. ஸ்டாலினும் இந்தியாவிற்குள்தான் இருக்கிறார். தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம்தான். பல மாநிலங்கள் ஒன்றாக இணைந்ததுதான் இந்தியா. அதில் ஆட்சி புரிபவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி. அவர் இந்தியாவில் இருப்பதை மறந்துவிட்டு பேசுகிறார். வேறு நாட்டில் இருப்பது மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார். அவரும் இந்த நாட்டில்தான் இருந்துகொண்டிருக்கிறார். அடிக்கடி கடிதம் எழுதுகிறாரே? அந்த அதிகாரம் யாரிடம் இருக்கிறது? மத்திய அரசிடம்தான் இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டுப் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதால் இப்படிப்பட்ட அவதூறு பிரச்சாரத்தைப் பரப்பி வருகிறார்” என்றார்.

தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்து பல அறிவிப்புகளை வெளியிடுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு,“ஒரு ரூபாய் வருமானம் இல்லாதபோதே ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக, கொரோனா காலத்தில் எங்களுக்கு என்ன வருமானம் இருந்தது? ஒரு ரூபாய் வருமானம் கிடையாது. அரசிற்கு அந்தக் காலகட்டத்தில் கூட வரிவருவாய் இல்லாமலேயே ஆட்சி கொடுத்த கட்சி அதிமுக. அதனால் வரிவருவாயைப் பெருக்கி, நாங்கள் அறிவிக்கும் திட்டங்களுக்கு தேவையான நிதியை உருவாக்குவோம். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருவோம்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share