அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
சென்னையில் இன்று பிப்ரவரி 4-ந் தேதி அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதிமுகவின் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகள்:
முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ. 2,000-மாக உயர்வு:
சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி:
மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்.
வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்:
வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிப்புகள்:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். அதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசின் சார்பில் மானியமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ஆன்லைன் முறை ரத்து செய்யப்படும். ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையே (Manual) மீண்டும் பின்பற்றப்படும்.
சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள்:
அ) இஸ்லாமிய, கிறித்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
ஆ) மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
முன்னதாக, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கடந்த ஜனவரி 17-ந் தேதி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.
