திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெறவில்லை – கனிமொழி தகவல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Kanimozhi Press Meet

சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 4) செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “சென்னையில் பல பகுதிகளில் இருக்கக்கூடிய அமைப்புகளும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அமைப்புகளும் இன்று எங்களைச் சந்தித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒரு அமைப்பு என்று இல்லாமல் கல்வியாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், பெண்கள் அமைப்புகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்கள்—எங்களோடு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். அவர்களது கருத்துக்களை ஒருங்கிணைத்து, எதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் இணைத்துக் கொள்ளலாம் என்பதைப் பரிசீலனை செய்து, முதல்வரிடம் அனுமதி பெற்று, அவர் எந்தெந்தக் கருத்துக்களைத் தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என்று கருதுகிறாரோ, அவை தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளிவரும்.

ADVERTISEMENT

உங்கள் கருத்துக்களை tnmanifesto.ai என்ற போர்ட்டலில் எழுத்து வடிவிலோ அல்லது குரல் பதிவாகவோ தெரிவித்தால், அதையும் நாங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொள்வோம்” என்றார்.

நேற்று டெல்லியில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரைச் சந்தித்து கூட்டணி குறித்து பேசியது குறித்த கேள்விக்கு, “பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் குழுவில் இருக்கக்கூடியவர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள். என்றார்.

ADVERTISEMENT

காங்கிரஸ் 35 சீட் வரை கேட்பதாக வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு, “இதுவரை எதுவும் பேசப்படவில்லை” என தெரிவித்தார்.

8 எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, தமிழகத்தைச் சேர்ந்த சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 8 எம்பிக்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச எழும் ஒவ்வொரு நேரத்திலும் அது தடுக்கப்பட்டு, அவருடைய உரையை அங்கே பதிவு செய்ய முடியாத ஒரு சூழல் இருந்ததால், அத்தனை பேரும் அமளியில் ஈடுபட வேண்டிய சூழல் உருவானது” என்றார்.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர் கேள்விக்கு, “யாராவது புதிதாக வந்தால் முதலமைச்சர் நிச்சயமாக உங்களுக்கு அறிவிப்பார்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share