பீகார் சட்டமன்றத் தேர்தலில் ‘மகாகத்பந்தன்’ கூட்டணி தோல்வியடைந்த நிலையில், இத்தேர்தல் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பீகாரில் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. காங்கிரஸ்- ஆர்ஜேடி அடங்கிய மகாபந்தன் கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தல் முடிவு குறித்து தனது எக்ஸ் பக்கம் மூலம் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்த கோடிக்கணக்கான பீகார் வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரின் இந்த தேர்தல் முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நியாயமானதாக இல்லாத ஒரு தேர்தலில், எங்களால் வெற்றி பெற முடியவில்லை.
சட்டமைப்பு மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான ஒரு போராட்டமாகவே இந்தக் களத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், ‘இந்தியா’ கூட்டணியும் பார்க்கின்றன. இந்த முடிவைஆழமாக மீளாய்வு செய்து, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான தங்கள் முயற்சிகளை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
பீகாரில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், தமிழகத்தில் திமுக கூட்டணி காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று (நவம்பர் 14) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “பீகார் வேறு, தமிழ்நாடு வேறு. இங்கு பாஜகவின் பாட்ஷா பலிக்காது” என்று தெரிவித்தார்.
பீகார் தேர்தல் முடிவுகளைப் பண பலத்தால் பாஜக களவாடிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தமிழ்நாட்டு மக்கள் மதவாதத்தையும், பாசிசத்தையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
