பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், தனது குடும்ப தொகுதியான ராகோபூரில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
பீகாரில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தற்போதைய நிலவரப்படி பாஜக 76, ஜேடியு 61, ஆர்ஜேடி 17, லோக் ஜன் சக்தி 14, காங்கிரஸ் 3 இடங்களில் வென்றுள்ளன.
இதில் மகாபந்தன் சார்பில் முதல் வேட்பாளராக போட்டியிட்ட தேஜஸ்வி யாதவ் தொகுதியில் காலையில் இருந்தே டப் ஃபைட் இருந்துகொண்டே இருந்தது.
ராகோபூர் தொகுதியில் ஆரம்ப சுற்றுகளில் தேஜஸ்வி யாதவ் சற்று பின்தங்கினார். 15ஆவது சுற்றில் இவருக்கும், இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதிஷ் குமாருக்கும் இடையே 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது. பாஜக வேட்பாளர் முன்னிலையில் இருந்தார்.
இதனால் தேஜஸ்வி வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்தது.
இந்தசூழலில் 21ஆவது சுற்றில் மீண்டும் தேஜஸ்வி முன்னிலை வகிக்கத் தொடங்கினார்.
தற்போது 32 சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்திருக்கும் நிலையில் ராகோபூர் தொகுதியில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் 1,18,597 வாக்குகள் பெற்று சதீஷ் குமாரை தோற்கடித்துள்ளார். பாஜக வேட்பாளர் 1,04,065 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.
எனினும், ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளில் அவரது ராஷ்ட்ரிய ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
