சிறையில் இருந்து வென்ற அனந்த் குமார்… எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பாரா?

Published On:

| By Kavi

இந்திய அரசியலில் எப்போதுமே எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமில்லை. அந்தவகையில் தான் பீகார் சட்டப்பேரவையில் தேர்தலில் ஒரு ட்விஸ்ட் நடந்திருக்கிறது.

சிறையில் இருந்தே தேர்தலை எதிர்கொண்ட ஒருவர் அபார வெற்றி பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் மொகமா தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்த தொகுதியில் என்டிஏ கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அனந்த் குமார் சிங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆர்ஜேடி சார்பில் வீணா தேவி, ஜன்சுராஜ் சார்பில் பிரியதர்ஷினி பியூஸ், ஆம் ஆத்மி சார்பில் ராஜேஷ் குமார் ஆகியோர் களம் கண்டனர்.

ADVERTISEMENT

ஆனால் தேர்தல் நெருங்கிய சமயத்தில் வீடு வீடாக, தெரு தெருவாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்கள் தோல்வியை கண்டுள்ளனர். அதேசமயம் சிறையில் இருந்தவாறு வெற்றிக் கனியை சுவைத்திருக்கிறார் அனந்த் குமார் சிங்.

91416  வாக்குகள் பெற்று 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். காலை முதல் சுற்றிலிருந்தே இவர்தான் முன்னிலை வகித்தார். இரண்டாம் இடத்தில் ஆர்ஜேடி வேட்பாளர் வீணா தேவி உள்ளார்.

ADVERTISEMENT

சிறையில் இருந்தே வென்ற அனந்த் குமார் யார்?

பீகார் மாநிலம் நதவான் கிராமத்தைச் சேர்ந்தவர் அனந்த் குமார் சிங். இவரது சகோதரர் திலிப் சிங், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர். உள்ளூரில் செல்வாக்குமிக்கவர். இவர் மறைந்துவிட்டார்.

சகோதரரின் செல்வாக்கை வைத்து அரசியலில் நுழைந்தார் அனந்த்.

லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை “ஜங்கிள் ராஜ்” என விமர்சிக்க தொடங்கப்பட்ட காலகட்டத்திலிருந்து பீகார் அரசியல் மாறியபோது, அனந்த் சிங் தனது முதல் வெற்றியை ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) சார்பில் 2005ல் பெற்றார்.

2010 சட்டமன்றத் தேர்தலிலும், அவர் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.

நிதிஷ் குமார் தலைமையிலான JD(U), ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் (RJD) கூட்டணி வைத்தபோது, அக்கூட்டணியை எதிர்த்து JD(U)-லிருந்து வெளியேறிய அனந்த் சிங், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வியத்தகு வெற்றி பெற்றார்.

2020 தேர்தலில், அவர் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு, 52.99% வாக்குகள் பெற்று அசுர பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்றார்.

இதசூழலில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்து 2025 தேர்தலை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளார்.

2005 முதல் தற்போது வரை மொகமா தொகுதியை தக்கவைத்து கொண்டிருக்கும் அனந்த் குமார் அந்த தொகுதியின் பாகுபலி என்று அழைக்கப்படுகிறார்.

1990களில் லாலுவின் ஆட்சியை “ஜங்கிள் ராஜ்” என்று குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில், நக்சலைட் தாக்குதல்கள் மற்றும் ராஜ்புத்-யாதவ் சமூகங்களுக்கிடையேயான மோதல்கள், உயர் சாதி நில உரிமையாளர்களான பூமிஹார் சமூகத்தை குறிவைத்தது.

இந்தசூழலில் அனந்த் குமார் சிங், பூமிஹார் சமூகத்தின் செல்வாக்குமிக்க தலைவராக இருப்பதால், அவர் பல்வேறு கட்சிகளில் ஜேடியு, சுயேச்சை, ஆர்ஜேடி மற்றும் மீண்டும் ஜேடியு என மாறி மாறி போட்டியிட்டபோதும், அவரது சமூகத்தின் ஆதரவு அவருக்கு பலமாக இருந்து வருகிறது. இதுவே அவரது தொடர் வெற்றிக்கு காரணமாக உள்ளது.

எதற்காக சென்றார்… வழக்குகள் எத்தனை?

அதேசமயம் பல்வேறு வழக்குகளை இவர் எதிர்கொண்டுள்ளார். இவரது தேர்தல் பிரமாண பத்திர தகவல்படி 52 வழக்குகள் அனந்த் மீது உள்ளது. கொலை, ஆள் கடத்தல், மற்றும் ஆயுதச் சட்டத்தை மீறுதல் (Arms Act) போன்ற தீவிரமான குற்ற வழக்குகளும் உள்ளன.

2022-ஆம் ஆண்டில், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில், இவரது பூர்வீக வீட்டிலிருந்து AK-47 ரக துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. அவர் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்காரணமாக எம்.எல்.ஏ பதவியை இழந்தார். 2022ல் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அவரது மனைவி நீலம் தேவி ஆர்ஜேடி சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

பின்னர் அனந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் தேர்தலுக்கு தயாரானார். ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 2025ல் போட்டியிட்டார்.

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் துலர்சந்த் யாதவ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அனந்த் குமார் சிங்கை பாட்னா காவல் துறை அதிகாரிகள் நவம்பர் 1 ஆம் தேதி இரவு கைது செய்தனர். தற்போது அனந்த் குமார் சிங் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்பாரா?

இருப்பினும் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளார் அனந்த் குமார் சிங்.

இந்தியச் சட்டம், குற்றம் நிரூபிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான சிறைத் தண்டனை பெற்றவர்களை மட்டுமே தேர்தலில் போட்டியிடத் தடை செய்கிறது. அனந்த் சிங் தற்போது “விசாரணைக் கைதியாகவே” இருக்கிறார், குற்றவாளியாக நிரூபிக்கப்படவில்லை.

அனந்த் சிங் வெற்றி பெற்றதன் காரணமாக, அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு பரோல் அல்லது இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, விசாரணைக் கைதிகள் தேர்தலில் வெற்றி பெற்றால், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதன்படி அனந்தும் பதவி ஏற்பார் என தகவல்கள் வருகின்றன.

இன்று காலை முதலே, ‘சிறை கதவு உடையும், சிங்கம் வெளியே வரும்’ என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share