தமிழக சட்டமன்ற தேர்தல் களம் ‘இப்பவே களை கட்டுவதை’ போல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் களப் பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே தேர்தல் களம் களைகட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக, “ஓரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் ஜூலை 1-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியது.

இதனைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், உறுப்பினர் சேர்க்கையுடன் நிற்காமல், தமிழக அரசின் திட்டங்கள் குறித்த மக்கள் கருத்துகளை கேட்டு அறியவும், தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை விளக்குவதற்கான பிரசாரமாகவும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முழக்கம் அமைய வேண்டும் என்றார். இதற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் வீடுகள் தோறும் திமுகவினர் பொதுமக்களை சந்தித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து “மக்களைக் காப்போம்
தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் ஜூலை 7-ந் தேதி முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது ஒவ்வொரு பகுதியின் பிரச்சனைகளை முன்வைத்தும் ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் அதிமுக ஆட்சி அமைந்தால் என்ன செய்வோம் என்கிற ‘தேர்தல்’ வாக்குறுதிகளையும் கொடுத்து வருகிறார்.

“உரிமை மீட்க… தலைமுறை காக்க’” என்ற முழக்கத்துடன் ஜூலை 25-ந் தேதி முதல் பாமக (செயல்) தலைவர் அன்புமணி 100 நாட்கள் நடை பயணத்தை நடத்தி வருகிறார். பாமக நிறுவனர்-தலைவர் ராமதாஸ், இந்த பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்; பாமக பெயர், கட்சி கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அன்புமணியின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த வரிசையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் “உள்ளம் தேடி… இல்லம் நாடி” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது கேப்டன் ரத யாத்திரையும் செல்கிறது. தேமுதிகவின் நிர்வாகிகளை ஊர்தோறும் சந்தித்து பேசுவதுடன் மக்களிடம் பிரசாரம் செய்வதுமாக பிரேமலதாவின் பயணம் அமைந்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பூத் பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்துகிறார். “ஒன்றிணைந்து களமிறங்குவோம்! வெற்றியை நமதாக்குவோம்!” என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் ஆகஸ்ட் 17-ந் தேதி முதல் சட்டமன்ற தொகுதி வாரியாக பயணத்தை தொடங்குகிறார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆகஸ்ட் 9-ந் தேதி தூத்துக்குடியில் தமது மாநிலம் தழுவிய பிரசார பயணத்தை தொடங்குகிறார். தமிழ்நாட்டின் 8 முக்கிய நகரங்களில் வைகோ பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். இடதுசாரி கட்சிகளும் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல்வேறு ஜாதிகளின் கோரிக்கைகளை முன்வைத்து ஜாதி வாரியாக கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். கோனார் சமூகத்திற்காக தேனி மலைப்பகுதியில் மாடு மேய்க்கும் போராட்டத்தை ஆகஸ்ட் 3-ந் தேதி நடத்தினார் சீமான். அதேபோல எஸ்சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை வெளியேற்றும் கோரிக்கையை முன்வைத்து பொதுக் கூட்டம் நடத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஆகஸ்ட் 25-ந் தேதி மதுரையில் மாநாடு நடத்துகிறார். “வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் உறுப்பினர் சேர்க்கையை தவெக நடத்தி வருகிறது. விஜய்யும் தமிழ்நாடு தழுவிய சுற்றுப் பயண விரைவில் மேற்கொள்ள இருக்கிறார். சட்டமன்ற தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே முழு வீச்சில் தொடங்கிவிட்டதால் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.