1950 களின் ஒரு பிரபலமான நடிகர் டி.கே மகாதேவன். (துல்கர் சல்மான்). அவரை உருவாக்கியவர் இயக்குனர் அய்யா – அதுதான் பெயர். (சமுத்திரக்கனி). ஒரு நிலையில் அவன் கதையை விட ஹீரோயிசத்தை முன்னிறுத்தும் பாணியில் மகாதேவன் நடிப்பதும் அப்படிப்பட்ட படங்களை மட்டும் ஒப்புக் கொள்வதும் அய்யாவுக்குப் பிடிக்கவில்லை.
தான் உருவாக்கிய மகாதேவன் தனக்குப் பிடிக்காத பாணியில் நடித்து ‘ரொம்ப ஆட்டம் போடறான்; நல்ல சினிமாவை அழிக்கிறான் என்று என்னும் அய்யா, மகாதேவனை இயல்பான உலகத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்று காரணம் சொல்லி, மகாதேவன் மேல் ஒரு பொய்க் கேஸ் போட்டு அவனை ஜெயிலுக்கு அனுப்புகிறார். ஜெயிலுக்குப் போய் விட்டு வந்தால் ஒழுங்கா இருப்பான் என்பது அவர் சொல்லும் காரணம்.
‘நடிகன் கைதட்டலுக்கு ஆசைப்படுவான்; ரசிகன் விரும்புவது போல நடிப்பான் அதில் என்ன தப்பு?’ என்பது மகாதேவன் கருத்து.
ஜெயிலுக்குப் போய் மீண்டும் வந்த மகாதேவனை ஒரு பிரபல தயாரிப்பாளரின் (நிழல்கள் ரவி) மகள் (காயத்ரி) காதலிக்க, அவளைக் கல்யாணம் செய்து கொண்டு மீண்டும் ஜெயித்து, தனக்கு பிடித்த வகையில் ஆக்ஷன் ஹீரோவாக உயர்கிறான் மகாதேவன்.
மாடர்ன் சினிமா என்ற ஸ்டுடியோ ஓனர் மற்றும் தயாரிப்பாளர் மார்ட்டின் (ரவீந்திரா விஜய்) மீண்டும் மகாதேவன் – ஐயா இருவர் காம்பினேஷனில் ஒரு படம் எடுக்க விரும்புகிறார்.
மகாதேவன் அய்யாவால் சினிமா ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்ட போது அய்யா எழுதி மகாதேவன் நடிக்க ஆசைப்பட்ட சாந்தா என்ற கதையை இப்போது எடுக்க முடிவு செய்கிறார்கள்.
படப்பிடிப்பின் முதல் நாள் அய்யா மேல் உள்ள கோபத்தை காட்டுகிறான் மகாதேவன். சாந்தா என்ற படத்தின் பெயரைக் காந்தா என்று மாற்றுகிறான். பேயை உள்ளே கொண்டு வருகிறான். பனிப்போர் வலுவாகிறது.
படத்தின் நாயகி (பாக்ய ஸ்ரீ) அய்யாவின் சிஷ்யை. அவள் அய்யாவின் தரப்பில் நிற்கிறாள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படியாக அய்யா எழுதிய கதையை மகாதேவன் ஹீரோயிசக் கதையாக மாற்ற முயல்கிறான்.
அய்யா எடுக்கும் ஷாட்கள் ஒவ்வொன்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியாக இருக்க, அதை மகாதேவன் இன்னொரு முறை எடுக்க வைத்து தனக்கு சாதகமாக நடித்து மாற்றுகிறான்.
அதற்கு சாதகமாக கதாநாயகியை தன் பக்கம் கொண்டு வருகிறான். மகாதேவனுக்கும் கதாநாயகிக்கும் காதல்… உறவு… என்று போகிறது.
இது அய்யாவுக்கும் பிடிக்கவில்லை. காரணம் அவள் அவனுக்கு என்று ஆகிவிட்டால் தன் விருப்பப்படி படத்தை எடுக்க அய்யாவால் முடியாது.
ஒரு நிலையில் மகாதேவன் கதாநாயகி நெருக்கம் , மகாதேவன் மனைவி , மாமனார் இருவருக்கும் தெரிய வருகிறது.
இதைத் தொடர்ந்து ஒரு எதிர்பாராத அசம்பாவிதம் நடக்கிறது.
பெரும் பிரபலமான இவர்கள் அனைவரையும் விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி (ராணா டகுபதி), பெரிய ஆட்களையே விசாரிக்கிறோம் என்ற இறுமாப்பில் எகத்தாளமாக நடந்து கொள்கிறார் . குற்றம் என்ன? குற்றவாளி யார் ? அப்புறம் நடந்தது என்ன? என்பதே,
ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் சார்பில் ராணா டகுபதி, துல்கர் சல்மான் , பிரசாந்த் பொட்லூரி, வர்கீஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான், சமுத்திரக் கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திரா விஜய், ஆடுகளம் நரேன் நடிக்க தமிழ் பிரபா கதை ஆலோசனை கூடுதல் திரைக்கதை வசனம் என்ற அளவில் பணியாற்ற, செல்வமணி செல்வராஜ் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் காந்தா.
மேக்கிங்கில் அந்தக் கால சினிமா உலகை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அருமை. துல்கர் சல்மான் நடிப்புச் சக்கரவர்த்தி என்று சொல்லப்படும் பிரபல ஹீரோவை உணர்ந்து நடிக்கிறார். படைப்பாளி என்ற கர்வம், நினைத்தது நடக்கவில்லையே என்ற குமுறல், தான் உருவாக்கிய நடிகன் இப்போது தன்னையே மதிக்காமல் இருக்கிறானே என்ற ஆத்திரம்…. என்று சிறப்பாக நடித்து இருக்கிறார் சமுத்திரக்கனி.
விசுவாசம் காதல் இரண்டுக்கும் நடுவில் மகாதேவன் – அய்யா இருவருக்கும் இடையில் உள்ள பனிப்போரை தீர்க்கத் துடிக்கும் கேரக்டரில் அற்புதமாக நடித்துள்ளார் பாக்யஸ்ரீ. ஒரு பார்வைக்கு சட்டென்று ஆரம்பகாலக் கீர்த்தி சுரேஷை நினைவு படுத்துகிறார்.
டானி சஞ்சேஸ் லோபஸின் ஒளிப்பதிவு கருப்பு வெள்ளை – கலர் மற்றும் 35 MM – சினிமாஸ்கோப் என்று எல்லா வகையிலும் அசத்துகிறது. ஒளி – இருள் பயன்பாடும் சிறப்பு .
ராமலிங்கத்தின் கலை இயக்கம் அபாரம்.
பூஜிதா டடிகொண்டா, அர்ச்சனா ராவ், ஹர்மன் கவுர் ஆகியோரின் உடைகள் மிகப் பொருத்தம்.
ஜானு சந்தரின் இசை ஜஸ்ட் ஓகே.
கதை திரைக்கதைதான் கன்னா பின்னா என்று கண்ணாமூச்சி ஆடுகிறது..
முதலில் இந்தப் படம் தியாகராஜா பாகவதர் வாழ்க்கையின் அடிப்படையில் இருக்கும் என்று படக் குழு விளம்பரப்படுத்தியது பெரும் தவறு.
தங்களைப் பற்றி ஆபாசமாக தொடர்ந்து எழுதிய லக்ஷ்மி காந்தன் என்ற பத்திரிகையாளர் மீது தியாகராஜா பாகவதரும், கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனும் கோபப்பட, லக்ஷ்மி காந்தன் கொலை செய்யப்பட, கலைவாணரும் பாகவதரும் ஜெயிலுக்குப் போனார்கள் என்பது வரலாறு..
ஆனால் இந்தக் படத்தில் அப்படி ஜெயிலுக்கு மகாதேவனையும் ‘இன்னொரு குணச்சித்திர நடிகரையும் ‘ (கலைவாணரை சொல்றாங்களாமாம்) ஜெயிலுக்கு அனுப்பி வைத்தது, டைரக்டர் அய்யா என்கிறார்கள் . இந்த விஷயத்தை தவிர இந்தப் படத்துக்கும் தியாகராஜ பாகவதருக்கும் சம்மந்தம் இல்லை.
எனவே தியாகராஜ பாகவதரின் கதையாமே என்று எதிர்பார்த்து வருபவர்கள் டென்ஷன் ஆவார்கள்.
ஒரு முன்னாள் இந்நாள் பிரபலத்தின் பெயரை சொல்லாமல் எடுத்தால் கூட ஒரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பு பெயர் சொல்லப்படாத அந்தப் பிரபலத்தை கனெக்ட் செய்வது போல இருக்க வேண்டும். பலபேரின் கேரக்டரின் தொகுப்பு என்றாலும் அது ஆர்வம் தூண்டும் ஒன்றாக அமைக்கப்பட்டு எழுதப்பட வேண்டும்.
சமுத்திரக்கனி கேரக்டருக்கு கொடுக்கப்பட்டிருக்கும அய்யா என்ற பெயர் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான எல்லிஸ் ஆர் டங்கனைக் குறிக்கும் . ஆனால் கலைஞர், எம்.ஜி.ஆர் இருவருக்கும் சினிமா குருவான டங்கன் மிக நல்ல மனிதர்.
பின்னாளில் அவர் ஒருமுறை பேட்டி கொடுக்கும்போது ”MY BOYS ARE RULING TAMILNADU ” என்று சொன்னபோது அரசியல் மாறுபாடுகளை மறந்து கலைஞர் , எம்.ஜி.ஆர் இருவரும் நெகிழ்ந்து ஏற்றுக் கொண்டது வரலாறு . அவரின் பெயரை வைத்து ஏன் இப்படி பொறாமை பிடித்த இயக்குனர் கேரக்டரைப் படைக்க வேண்டும்?
அதே போல மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் மிகப் பெரிய ஸ்டுடியோ அதிபர் . திறமைசாலி. தனது மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பின் அனுபவத்தை வைத்து பல படங்களில் காட்சிகள் வைத்து அசத்தியவர். அவர் துப்பாக்கி வைத்திருந்தார்..
ஒரு படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிக்கு எம்.ஜி.ஆர் தேதி தருவது தாமதம் ஆக, எம் ஜி ஆருக்கு ‘டூப்’ போட்டு மிச்ச காட்சிகளை எடுத்தார். படம் பார்த்த எம்.ஜி.ஆர் டூப் என்பதே தெரியாமல் எடுத்திருக்கும் விதம் பார்த்து அசந்து போனார்.
சுந்தரம் முன்னால் சேரில் கலைஞர் மட்டும்தான் உட்கார முடியும்.
அங்கே இருக்கும் போது, எம்.ஆர்.ராதா பெண் சம்மந்தப்பட்ட ஒரு விசயத்தில், ‘மாட்டினால் சுந்தரம் சுட்டு விடுவார் ‘ என்று அங்கிருந்தே கிளம்பி விட்டார் என்பது வரலாறு.
அந்த மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற பெயரை மாடர்ன் ஸ்டுடியோ என்று பெயர் மாற்றி அதன் உரிமையாளர் துப்பாக்கி வைத்திருந்தார் என்று சொல்லி அதன் மூலமும் சுந்தரத்தை அடையாளப்படுத்தி, ஆனால் அவர் கதாநாயகியின் உதவியாளரான பெண்ணோடு உறவில் இருந்தார் என்று ஒரு காட்சி..
எம்.ஜி. ஆர், எம்.ஆர். ராதா துப்பாக்கி சூடு சம்பவத்தை நினைவு படுத்தும் ஒரு காட்சி…
முக்கியமாக நாயகன் கேரக்டர் யாரை அடையாளப்படுத்துகிறது என்பதில் மகா குழப்பம்.
தியாகராஜா பாகவதர் என்று அவர்களே சொன்னார்கள். அவர் சுத்தமாக இல்லை.
துல்கரின் தலைமுடி ஹீரோயிச முன்னிறுத்தல்கள் சில்க் ஜிப்பா எல்லாம் எம்.ஜி. ஆரை ஞாபகப்படுத்துகிறது.
மகாதேவன் நாடகத்திலேயே எட்டு வேடத்தில் நடித்தவர்.. அவர் நடிப்புச் சக்கரவர்த்தி என்று வேறு சொல்கிறார்கள். அது சிவாஜியை ஞாபகப்படுத்துகிறது.
ஒரு காட்சியில் அவரது நடிப்பு, தோற்றம் , காந்தா என்ற படப் பெயர், மோகன் என்ற கேரக்டர் பெயர் இவை எல்லாம் ரத்தக் கண்ணீர் பட எம்.ஆர்.ராதாவை நினைவுக்கு கொண்டு வருகிறது.
ஒரு காட்சியில் சார்லி சாப்ளின் பாணியில் துல்கர் நடிக்கும்போது சந்திரபாபுவைச் சொல்வது போல இருக்கிறது.
இப்படி யார் என்று நிறுவுவதில் ஏற்பட்ட குழப்பம் ஈர்ப்பை ஏற்படுத்தாமல் சலிப்பையே ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.
விசாரணை அதிகாரி தோற்றத்துக்கு பொருத்தமாக இருந்தாலும செயற்கையான ஓவர் நடிப்பு , தெலுங்கு வாசனை வீசும்படியாக அவரே டப்பிங் பேசுவது என்று ரொம்பவும் சோதிக்கிறார் ராணா டகுபதி. பாகுபலி ராணா எங்கே போனார்?
ஒரு காட்சியில் ஒருவர் , ஹீரோவைக் காட்டி ”ஒரு படத்துல இவர் பதினாறு வேடம் போட்டு இருக்கிறார் என்று சொல்ல , ஏன் இங்க நடிக்கிறதுக்கு வேற யாருமே இல்லையா?” என்கிறார் ராணா, கிண்டலாக..
இப்படியாக நவராத்திரி சிவாஜிக்கு ஒரு குத்து. தசாவதாரம் கமலுக்கு ஒரு குத்து!
கூந்தல் இருக்கறவங்க அள்ளி முடியத்தானே செய்வாங்க.?
லெவலின் அந்தோணி கோனாசல்வேசின் படத் தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம், முக்கியமாக கிளைமாக்ஸ் பகுதியில்.
படத்தில் வரும் நாயகன், இயக்குனர், நடிகை , நாயகனின் அப்பா எல்லோரும் அயோக்கியர்கள் கெட்டவர்கள் வன்மம் பிடித்தவர்கள் , ஒழுக்கமில்லாதவர்கள்.
இதுதான் 1950 களின் தமிழ் சினிமா என்கிறார்கள் துலக்ர் சல்மானும் ராணா டகுபதியும்.
அதன் விளைவு என்ன?
படத்தில் எந்த கேரக்டர் கூடவும் படம் பார்ப்பவர்கள் ஒன்ற முடியவில்லை. ‘எவன் செத்தா என்ன? எவன் பொழைச்சா என்ன ? எவன் குற்றவாளியா இருந்தா என்ன? நான் குற்றவாளி இல்லப்பா..’ என்ற மனநிலையே படம் பார்ப்பவருக்கு ஏற்படுகிறது.
படத்தின் டைட்டிலின் போது, கிருஷ்ணன் பஞ்சு , உள்பட பல தமிழ் இயக்குனர்கள் டெக்னீஷியன்கள் இவர்கள் புகைப்படத்தை மட்டுமே தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படத்திலும் காட்டுகிறார்கள்.
இதன் மூலம் தமிழ் சினிமா எப்படி இருந்ததுன்னு பாருங்க என்று சொல்லி தெலுங்கு ரசிகர்களை கவரப் பார்க்கிறர்கள். அவர்களுக்குப் பிடிக்கலாம். ஆனால் நம்ம ரசிகர்களுக்கு?
தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் மொழி மாற்றப்பட்ட மகாநட்டி என்ற – சாவித்ரியின் வரலாறு சொல்லும் படத்திலும் இப்படித்தான்.
சாதாரண நடிகையாக இருந்த சாவித்திரிக்கு சிறப்பான கேரக்டர்களைத் தந்து நல்ல வசனங்களை எழுதி, சிறந்த படங்களை இயக்கி சாவித்ரியை உச்சத்துக்குக் கொண்டு போன கே.எஸ்.கோபால கிருஷ்ணன் , ஆரூர்தாஸ் போன்றவர்களை கோமாளி போலக் காட்டினார்கள்.
ஜெமினி கணேசன், சாவித்திரி இரண்டு பேர் மேலும் தப்பு இருந்தும் ஜெமினி கணேசன் மட்டுமே குற்றவாளி என்று காட்டினார்கள்.
மலையாளப் படங்களில் தமிழர்களே மட்டம் என்பார்கள். தெலுங்குப் படங்களில் தமிழ் நாட்டு பிரபலங்களே மோசம் என்பார்கள்.
அதன் தொடர்ச்சிதான், ‘தமிழ்’ ப் பிரபாவும் பணியாற்றி இருக்கும் இந்த காந்தா.
காந்தா .. படத்தில் இயக்குனர் அய்யா ஆசைப்படுவது போல சாந்தாவாகவே வந்திருக்கலாம்.
- ராஜ திருமகன்
