பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனப்பகுதியில் கவியருவி என அழைக்கப்படும் குரங்கு நீர் வீழ்ச்சி உள்ளது. இது பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் பிரபல சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் அப்பகுதியில் இதமான சூழலில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை, கவர்கல், காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.
கன மழை காரணமாக ஆழியார் கவியருவியில் திடீரென இன்று (டிசம்பர் 17) அதிகாலை முதல் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருவியில் செந்நிறமாக ஆர்ப்பரித்து அதிக சத்தத்துடன் நீர் கொட்டி வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
நீர்வரத்து சீரான உடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.
