இந்தியாவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
நம் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், தேவையான நிதியுதவியை அளிக்கும் வகையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்நாட்டு ஆன்மீக சுற்றுலா மற்றும் யாத்ரீகர்களுக்கான புனரமைப்பு, ஆன்மீகம், பாரம்பரிய மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்துவதற்கான திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது.
இதில், உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசுகளும் அடங்கும். 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மத்திய சுற்றுலா அமைச்சகம் இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,726.74 கோடி ரூபாய் மதிப்பிலான 54 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நம் நாட்டில் வெவ்வேறு வகையான முக்கியத்துவம் கொண்ட தளங்களின் அடிப்படையில் சுற்றுலாவை மேம்படுத்த 5,290.30 கோடி ரூபாய் மதிப்பிலான 76 திட்டங்களுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதேபோல, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலாத் தலங்களில் அதன் முக்கியத்துவம் சார்ந்த வகைகளில் மேம்படுத்த ஏதுவாக வியத்தகு இந்தியா 2.0 என்ற முன்முயற்சி நடவடிக்கைகளை மத்திய சுற்றுலா அமைச்சகம் தொடங்கியுள்ளது. நீடித்த மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய சுற்றுலா நடைமுறைகளை உள்ளடக்கிய வகையில் சுற்றுலாத் தளங்களை முழு அளவில் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய சுற்றுலா அமைச்சகம் ஊக்கமளித்து வருகிறது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் ஊக்கத்தொகை வழங்குவதற்கான திட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் என சுற்றுலா தளங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சமூக வலைதளம், இணையதளம் மற்றும் கண்காட்சிகள் உட்பட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்களவையில் நேற்று (டிசம்பர் 1) எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
