வெயிலில் வெளியே போய் வந்த உடனேயே குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதோ, மிகவும் குளிர்ந்த நீரைப் பருகுவதோ கூடாது. உடனடியாக குளிக்கக்கூடாது. இதெல்லாம் காலங்காலமாக நமக்குச் சொல்லப்படும் அறிவுரைகள்.
இவற்றின் பின்னணியில் அறிவியல்ரீதியான காரணங்கள் இல்லாமல் இல்லை. நம் உடலுக்கு வெப்பத்தன்மையும் குளிர்ச்சித்தன்மையும் இருக்கும்.
அந்த வெப்பத்தன்மை திடீரென குளிர்ச்சித்தன்மைக்கு மாறுவதோ, குளிர்ச்சித்தன்மை திடீரென வெப்பத்தன்மைக்கு மாறுவதோ நம் உடலுக்கும் மூளைக்கும் நல்லதல்ல.
எனவே, வெயிலில் அலைந்துவிட்டு வீடு திரும்பியதும் பத்து நிமிடங்கள் கழித்தே தண்ணீர் குடியுங்கள், முகம் கழுவுங்கள், குளியுங்கள்.
அப்படிச் செய்யாமல் உடனடியாக குளிப்பதையும், ஐஸ் வாட்டர் குடிப்பதையும் செய்தால் கபம் தாக்கும். அதாவது, உடனடியாக இன்ஃபெக்ஷன் தாக்கி, நோய் எதிர்ப்புத்திறன் குறையும்.
அதனால் மண்டையில் நீர் கோப்பது, தொண்டைக் கரகரப்பு, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, காய்ச்சல் வருவது போன்ற உணர்வு ஏற்படும்.
எனவே, வெயிலில் சென்று விட்டு வந்ததும் நம் உடலானது நார்மல் வெப்பநிலைக்குத் திரும்பிய பிறகுதான் தண்ணீர் குடிப்பது, முகம் கழுவுவது, குளிப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
கொளுத்தும் வெயிலில் போய்விட்டு வந்ததும் வெப்பம் தணிப்பதாக நினைத்துக்கொண்டு ஐஸ் வாட்டர், ஐஸ்க்ரீம், ஜில்லென ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவே பலரும் விரும்புவார்கள். அப்படிச் சாப்பிடும்போது உடலால் உடனடியாக அந்தக் குளிர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஐஸ் வாட்டர் குடிப்பதாக வைத்துக்கொள்வோம்… அந்தக் குளிர்ச்சியில் உள்ள நீரை நம்மால் குறைவாகத்தான் குடிக்க முடியும். அதுவே சாதாரண தண்ணீர் என்றால் நிறைய குடிக்க முடியும். உடலில் நீர் வறட்சியும் ஏற்படாது.
எனவே, உடல் இயல்பான வெப்பநிலையில் இருக்கும்போது ஆசைக்கு என்றோ ஒரு நாள் ஐஸ்க்ரீம், ஜூஸ் எடுத்துக்கொள்வதில் தவறில்லை.
கோடைக் காலத்தில் உடல் வெப்பம் உங்களைத் தாக்காமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம். அந்த வகையில் இளநீர், பானகம், நீர் மோர் குடிக்கலாம். நுங்கு, தர்ப்பூசணி, கிர்ணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை நிறைய எடுத்துக்கொள்ளலாம்.
இவற்றிலுள்ள நீர்ச்சத்து உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். சத்துகள் இழப்பையும் ஈடுகட்டும்.
மண்பானையில் தண்ணீர் ஊற்றிவைத்து, ஒரு துண்டு வெட்டிவேர், ஒரு துண்டு விளாமிச்சை வேர் இரண்டையும் சுத்தமான காட்டன் துணியில் மூட்டையாகக் கட்டி பானைக்குள் போட்டு வைத்துக் குடிக்கலாம்.
தாழம்பூ கிடைத்தால் அதில் ஜூஸ் செய்து குடிக்கலாம். கடைகளில் வாங்கும் நன்னாரி சர்பத்தில் கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே, அதைத் தவிர்த்து நன்னாரி வேரைச் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரில் எலுமிச்சைப்பழம் சேர்த்துக் குடிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்னென்ன சொல்றாரு பாருங்க: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: வருகிறது உள்ளாட்சித் தேர்தல்…
முள்ளாய் குத்தும் மோகம்… 29 ஆண்டுகளைக் கடந்தும் பெருந்திணை காட்டும் ‘மோகமுள்’
அந்த ஆயுதம் இன்னும் வீட்ல இருக்கா? – அற்புதம்மாளை கலாய்த்த அறிவு