வைஃபை ஆன் செய்த உடனேயே பாமகவின் மாமல்லபுரம் சித்திரைப் பெருவிழா மாநாடு தொடர்பான பாமகவினரின் குமுறல்கள்தான் மலைபோல குவிந்தன.
இந்த குமுறல்கள், கொந்தளிப்புகளை எல்லாம் மலைத்து பார்த்தபடியே வாட்ஸ் ஆப் தமது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது ஒரு புதிரோடு!
பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25-ந் தேதி தமிழ்நாடே எதிர்பார்க்கும் மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகப் போகிறதாம்!
அப்படி என்ன முக்கிய அறிவிப்பு? என்ற கேள்விக்கு கடைசியாக பதிலைப் பார்ப்போம். இந்தியா- பாகிஸ்தான் யுத்தமே முடிந்துவிட்ட நிலையில் இன்னமும் பாமகவில் அப்பா- மகனுக்கு இடையேயான போர் நின்றபாடில்லை என புலம்புகின்றனர் பாமகவினர்.
சரி அப்பா ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் என்னதான்யா பிரச்சனை? யாருடன் கூட்டணி சேருவது என்பதில்தானே ‘பஞ்சாயத்து’ என்கிற கேள்விக்கு… அய்யோ.. அய்யோ.. அதுவும் பொறவுதாங்க.. முதலில் எங்க இருந்து பிரச்சனை ஆரம்பிக்கிறது தெரியுமா? என பீடிகையோடு பேசுகின்றனர் பாமகவினர்.
சரி அப்பாவுக்கும் மகனுக்கும் அப்படி என்னதான் மோதலாம்? அதாவது பாமக- கட்சியின் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான பிரச்சனையாம். டாக்டர் ராமதாஸைப் பொறுத்தவரை, இறுதி மூச்சு வரை பாமகவை தம் பிடியில் வைத்திருக்க நினைக்கிறாராம்; ஆனால் மகன் அன்புமணியோ, இப்போதே கட்சியை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டு அப்பாவுக்கு ‘கட்டாய’ ஓய்வு தர வேண்டும் என நினைக்கிறாராம்.
இந்த மோதல்தான் மாமல்லபுரம் சித்திரைப் பெருவிழா மாநாட்டிலும் வெடித்தது. டாக்டர் ராமதாஸ், ஒருமையில் கடுமையில் விமர்சித்தது பேசியது எல்லாம் கட்சி நிர்வாகிகளை அல்ல.. அண்ணன் அன்புமணியைத்தான் என பல்லைக் கடிக்கின்றனர் பாமகவினர்.

மாமல்லபுரம் கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், என்னை கிழவன் என நினைத்து ஏமாற்றி விடலாம்னு நினைக்காதீங்க.. என் கைகளைப் பிடித்து பாருங்க.. என் பலம் என்னனு தெரியும்.. என்னைப் போன்று யாரும் இல்லை. நிறைய பேர் இங்கு உழைக்காமல், ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும். நான் வலுவாக உள்ளேன். இன்னும் உங்களுக்காக உழைக்க வலுவாக இருக்கிறேன்… நம்மாள், நம்மாளையே காட்டிக்கொடுக்கிறார்கள். நம்மாள் நமக்கே ஓட்டுப் போடவில்லை. இனி அப்படி இருந்தால், உங்கள் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன். அதாவது உங்கள் பொறுப்புகள் அனைத்தும் பறிக்கப்படும். அந்த பதவியை ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடாத ஒரு இளைஞனிடம் கொடுத்துவிடுவேன். எம்.எல்.ஏ. என்று கூட பார்க்க மாட்டேன், கடலில் தூக்கி வீசி விடுவேன். உங்கள் கணக்குகள் பார்க்கப்படுகிறது.
எனவே இனி சும்மா ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியாது. உங்களை நம்பி தேர்தலில் இறங்கினால் அவ்வளவு தான். சிலர் கூட்டணி பற்றி பேசுகிறார்கள். கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதனை நான் முடிவு செய்வேன். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் என ஏகமாய் கொந்தளித்திருந்த ராமதாஸின் பேச்சு முழுக்க முழுக்க அன்புமணியை மறைமுகமாகத் தாக்கி பேசியதுதானாம்.
இப்படி பொதுமேடையில் பகிரங்கமாகவே ராமதாஸ் கொட்டித் தீர்க்க- திட்டித் தீர்க்க என்னதான் காரணம் என பாமக மூத்த தலைவர்களிடம் பேசிய போது, 2024 லோக்சபா தேர்தலில் இருந்து ப்ளாஷ்பேக்கை தொடங்கினார்கள்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என டாக்டர் ராமதாஸ் முடிவெடுத்துவிட்டார்; இதற்காக அதிமுக ராஜ்யசபா எம்பி சிவி சண்முகம் மூலம் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி ஒப்புதலும் பெற்றுவிட்டார். இந்தப் பேச்சுவார்த்தையை முழுமையாக நடத்தி ‘டீல் செய்தது எல்லாமே ராமதாஸின் மகளும் அன்புமணியின் அக்காவுமான காந்தியும் அவரது கணவர் பரசுராமனும்தான்
இதை கொஞ்சமும் ரசிக்காத அன்புமணி, தந்தை ராமதாஸுடன் மல்லுக்கட்டி இருக்கிறார். அன்புமணியோ, 2024 லோக்சபா தேர்தலிலும் பாஜகதான் ஜெயிக்கும்.. நான் ராஜ்யசபா எம்பி.. அதனால் எனக்கு எப்படியும் மத்திய அமைச்சர் பதவி வந்துவிடும்.. 2004-ல் அமைச்சராகி கட்சியை வலுப்படுத்தியதைப் போல இப்பவும் செய்துவிடலாம்.. அதனால் பாஜகவுடனேயே கூட்டணி வைப்போம் என அடம்பிடித்துள்ளார். இதற்கு டாக்டர் ராமதாஸ் ஒப்புக் கொள்ளவே இல்லையாம்.. இந்த மோதலால், தைலாபுரம் தோட்டமே ‘களேபர காடாக’ மாறியும் போனதாம். ராமதாஸ் ஒப்புக் கொள்ளாத நிலையிலேயே பாஜகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார் அன்புமணி. இதை ஏற்க முடியாமல் இருந்தார் ராமதாஸ். மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜகவோ, அன்புமணியை கண்டு கொள்ளவே இல்லை.. இதில் எங்கே அமைச்சர் பதவி கிடைக்குமாம்?.. இதனால் ராமதாஸ், பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிட்டாராம்.
சரி… டாக்டர் ராமதாஸ் திடீரென அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட என்னதான் காரணம் என தைலாபுரத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம்.. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடனேயே கூட்டணி என்கிற அன்புமணியின் முடிவை ஜீரணிக்கவே முடியவில்லையாம் ராமதாஸுக்கு. அவரைப் பொறுத்தவரை அதிமுகவுடன் மட்டும் கூட்டணி; அதிமுக யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறாராம்.
ஆனால் சென்னைக்கு வருகை தர இருந்த அமித்ஷாவை சந்தித்து பாமக- பாஜக கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட ஏற்பாடு செய்து கொண்டிருந்தாராம் அன்புமணி. இதனால்தான் என்ன நடந்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்து அன்புமணியை கட்சித் தலைவர் பதவியில் இருந்து தூக்குவதாக அறிவித்தாராம் ராமதாஸ்.
இப்படித்தான் பாமகவின் நிலைப்பாடு இருக்க, திமுகவுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை டாக்டர் ராமதாஸ் நடத்துகிறார் என்கிற செய்திகளும் வலம் வருகின்றன. இதுபற்றி நாம் அண்ணா அறிவாலயத் தரப்பில் விசாரித்தால், இப்படி ஒரு பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை. இது திட்டமிட்டே கிளப்பிவிடப்படுகிற ஒரு செய்தி அவ்வளவுதான் என்கின்றன. பாமகவை ஏன் திமுக ஒதுக்க வேண்டும்.. பாமகவும் வந்தால் வட தமிழ்நாட்டில் திமுகவுக்கு லாபம்தானே என நாம் கேள்வி கேட்டால், முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில் 2026 தேர்தலில் வெற்றிதான் இலக்கு என்பதில் உறுதியாக உள்ளார்; தற்போதைய கூட்டணியை சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றி தேர்தலை சந்தித்தால் போதும்; அந்த கட்சியை இழுக்கிறேன்.. இந்த கட்சியை இழுக்கிறேன் என்கிற புது ஆபரேஷன்கள் எல்லாம் தேவையே இல்லாத ‘ஆணிகள்’ என தம்மை சுற்றிய வட்டாரங்களில் கறாராக சொல்லிவிட்டாராம்.
அதேநேரத்தில் தேமுதிக மட்டும், கெத்து காண்பிக்கிறேன் பேர்வழி என பேரம் பேசாமல் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வந்தால் கூட்டணியில் சேர்க்கலாம் மற்றபடி வேற எந்த ‘ஆணியும்’ தேவை இல்லை என்பதும் முதல்வர் ஸ்டாலினின் உறுதியான நிலைப்பாடு என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
அத்துடன், பாமகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை; அப்படி வரும் தகவல்களை எல்லாம் நம்பவும் வேண்டாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் அன்பாக பேசி வரும் அமைச்சர் எ.வ.வேலு மூலமே தகவல் அனுப்பி வைத்தாராம் ஸ்டாலின்.
சரி.. இத்தனைக்கும் பிறகு அப்படி என்ன டாக்டர் ராமதாஸ் ஜூலை 25-ந் தேதி முக்கியமான முடிவை அறிவிக்கப் போகிறார்? என்ற புதிருக்கு இப்போதாவது விடையை சொல்லுவோம் என்றபடியே, “2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கிறது” என்பதுதான் ஜூலை 25-ந் தேதி டாக்டர் ராமதாஸ் வெளியிடப் போகும் அறிவிப்பாம் என மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
இதனிடையே நீண்டநேரமாக இன்பாக்ஸ் மிளிர்ந்து கொண்டிருக்க ஓபன் செய்து பார்த்தோம். நமது டிஜிட்டல் திண்ணையில் “ஸ்டாலினின் 7 படைத்தளபதிகள்… ஒதுக்கப்பட்ட தொகுதி பட்டியல்…தேர்தல் யுத்தம் ஆரம்பம்” என வெளியான செய்தி குறித்துதான்.
டிஜிட்டல் திண்ணையில், திமுகவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அர.சக்கரபாணி, எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் 7 மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட இருக்கின்றனர். இவர்களுக்கான மாவட்டங்களும் அவற்றின் தொகுதிகளையும் நாம் பட்டியலிட்டிருந்தோம்.
நாம் வெளியிட்டிருந்த பட்டியலில் சில திருத்தங்கள் உள்ளன. அதாவது,
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சேலம், தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் 48 தொகுதிகள்
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் 35 தொகுதிகள்
அமைச்சர் அர.சக்கரபாணிக்கு கிருஷ்ணகிரி, திண்டுக்கல் திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் 23 தொகுதிகள்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் 28 தொகுதிகள் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என சரியான பட்டியலை சென்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.