ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதம் குறித்து பேசிய மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா பேசியதற்கு உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு மாநில அமைச்சராக இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசுவதா? என உச்சநீதிமன்றம் விளாசி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர்- Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் நாள்தோறும் மத்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் இணைந்து செய்தியாளர்களிடம் விவரித்தவர்களில் கர்னல் சோபியா குரேஷியும் ஒருவர். இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.
மத்திய பிரதேசத்தில் பாஜகவின் அமைச்சரான குன்வர் விஜய் ஷா, Operation Sindoor குறித்து பேசுகையில், இந்திய சகோதரிகளின் குங்குமத்தை அழித்த தீவிரவாதிகளை அவர்களது சகோதரிகள் (சோபியா குரேஷி) மூலமே அழித்து ஒழித்துவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி என ஆவேசமாக கூறினார். இதுதான் சர்ச்சையாகிவிட்டது.
நாட்டுக்காக சேவையாற்றும் ராணுவ கர்னல் சோபியா குரேஷியை அவரது இஸ்லாம் மதத்தை முன்வைத்து தீவிரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் விஜய் ஷா பேசியதற்கு கண்டனங்கள் குவிந்தன. இதனையடுத்து தமது கருத்துக்கு விஜய் ஷா மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மேலும் சோபியா குரேஷி என் உடன் பிறந்த சகோதரி போன்றவர்; அவரிடம் 100 முறை மன்னிப்பு கேட்கிறேன் எனவும் பல்டி அடித்தார் விஜய் ஷா.
ஆனாலும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், அமைச்சர் விஜய் ஷா மீது தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மேலும், நாளை நான் உயிருடன் இருப்பேனா என எனக்குத் தெரியாது; இப்படி பேசிய அமைச்சர் விஜய் ஷா மீது 4 மணிநேரத்தில் வழக்கு பதிவு செய்தாக வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார்.
மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் விஜய் ஷா மேல்முறையீடு செய்தார். இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஒரு அமைச்சராக இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் கருத்துகளை தெரிவிப்பதா? என கடும் கண்டனம் தெரிவித்தது. ஒரு அமைச்சர் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா? எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் பெஞ்ச், மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷாவை விளாசியிருக்கிறது.