திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகாததற்கு திருச்சி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருச்சி டிஐஜி வருண்குமார், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் நாம் தமிழர் கட்சியினர், டிஐஜி வருண்குமாரை பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் விமர்சித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாகவே டிஐஜி வருண்குமாரை விமர்சித்தார். சமூக வலைதளங்களிலும் நாம் தமிழர் கட்சியினர், டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசி வந்தனர். இதனால் சமூக வலைதளங்களிலேயே நாம் தமிழர் கட்சியினருக்கு கடும் எச்சரிக்கையையும் விடுத்திருந்தார் வருண்குமார் ஐபிஎஸ்.
அத்துடன் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது டிஐஜி வருண்குமார் அவதூறு வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது ஒவ்வொரு முறையும் டிஐஜி வருண்குமார் ஆஜராகி வருகிறார். சீமான் அவ்வப்போது ஆஜராகாமல் இருப்பதும் நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளாவதும் தொடருகிறது.
திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்றும் இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணைக்கு டிஐஜி வருண்குமார் வழக்கம் போல ஆஜரானார். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, இன்றைய விசாரணைக்கு ஆஜராவதாக கூறிவிட்டு ஏன் இன்று நீதிமன்றத்துக்கு சீமான் வரவில்லை? என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.