வைஃபை ஆன் செய்ததும், ‘நாங்க புதுசா.. நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க…’ பாடலை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் டிவியில் பாடிக் கொண்டிருந்ததை ரசித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
அப்படி யாருப்பா ரொம்ப உற்சாகத்தில் இருக்கிறது?
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் உற்சாக வெள்ளமே கரைபுரண்டு ஓடுகிறதே.. ” மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் ஜூலை 7-ந் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்தை கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கிவிட்டார்.
சேலத்தில் இருந்து மத்திய அரசு புதியதாக அப்கிரேட் செய்த ‘இசட் பிளஸ்’ பாதுகாப்புடன் ரொம்ப உற்சாகமாகவே மேட்டுப்பாளையம் வந்து ரிசார்ட்டில் தங்கிவிட்டார் எடப்பாடி. ஜூலை 7-ந் தேதி காலை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட கையோடு விவசாயிகளை திருமண மண்டபம் ஒன்றில் சந்தித்து பேசினார். ஒவ்வொரு தொகுதி வாரியாக விவசாயிகள் கருத்துகளை சொல்ல வேண்டும் என இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் எஸ்பி வேலுமணி.

இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் சந்தித்து சுற்றுப் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, நயினார் நாகேந்திரன் உள்ளே நுழைந்ததும், “வாங்க.. வாங்க… உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்” என முகம் முழுவதும் அப்படி ஒரு மகிழ்ச்சியுடன் வரவேற்றார் எடப்பாடி. இதன் பின்னர் எடப்பாடியின் சுற்றுப் பயணத்தை பாஜக தலைவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தனர்.
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, சீரியசாக ஒரு விஷயத்தை ஆலோசித்தனர். வடதமிழகம்- தென் தமிழகம் இடையேயான மையமான ஒரு இடத்தில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் வகையில் மிக பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் அந்த மேட்டர். “நம்ம இரு கட்சிகளும் இணக்கமாக இணைந்து தேர்தல் பணிகளை செஞ்சுகிட்டு இருக்காங்க.. அதனால இப்படி ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தினால் இரு கட்சித் தொண்டர்களும் ரொம்பவே உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் இறங்கிவிடுவாங்க” என இரு கட்சித் தலைவர்களும் ‘ஒருசேர’ ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.

அதிமுகவில் ‘புகைச்சல்’ மறுபடியும் கிளம்புதாமே?
ஆமாம்.. கொங்கு மண்டலத்தில் ‘டேரா’ போட்டு எடப்பாடி பழனிசாமி இப்படி சீரியசாக சுற்றுப் பயணம், ரோடு ஷோ, மக்கள் சந்திப்பு என பிஸியாக இருக்கிறார்..

ஆனால் அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் அண்மையில் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவருமான செங்கோட்டையன், எடப்பாடி நிகழ்ச்சி பக்கம் எட்டிகூடப் பார்க்கவில்லை. இத்தனைக்கும் உடுமலைப்பேட்டை வரை சொந்த வேலைக்காக வந்து போயிருக்கிறார் செங்கோட்டையன்.. இது எல்லாம் எடப்பாடி கவனத்துக்கும் போயிருக்கிறதாம்.
ஓஹோ… மேற்கே கொங்கு பகுதியில் இப்படி ஒரு தென்றலும் சூறாவளியும்னா..வடக்கே வட தமிழகத்தில் ‘புயல்’ வலுவாகுதாமே?

ஆமாம்.. ஆமாம்.. ஒரே நாளில் அப்பா பாமகவும் மகன் பாமகவும் போட்டி கூட்டம் நடத்தி இருக்காங்க..
அப்பா பாமக, செயற்குழு கூட்டத்தை ஓமந்தூர் திருமண மண்டபத்தில் நடத்தியது. மகன் பாமக, சென்னையை அடுத்த பனையூரில் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தை நடத்தியது..
அப்ப சுவாரசியங்களுக்கு பஞ்சமே இல்லை?
அப்பா பாமக செயற்குழுவில் என்ன நடந்ததாம்?
தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முழுவதும்,
பாமக செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக படித்துப் பார்த்து திருத்தங்கள் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தாராம் டாக்டர் ராமதாஸ்.
ஓமந்தூர் திருமண மண்டபத்தில் இன்று ஜூலை 8-ந் தேதி காலை முதலே பாமகவினர் திரண்டிருந்தனர். இந்த செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 158 பேர் கலந்து கொண்டனர்.
பொதுவாக பாமகவின் இப்படியான கூட்டங்களில் அன்புமணி குடும்பத்தில் இருந்து மொத்தம் 7 பேர் பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த முறை அந்த 7 பேரும் மிஸ்ஸிங்.
அதே நேரத்தில் பாமக செயற்குழுவில் இம்முறை ராமதாஸ் மூத்த மகள் ஶ்ரீகாந்தி பங்கேற்றார்; மேடையில் அமர வைக்கப்பட்டார். சேலம் எம்.எல்.ஏ. அருள் தொடங்கி அனைவரும் ஶ்ரீகாந்தியை ஆஹோ ஓஹோவென புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் அன்புமணியை நீக்க வேண்டும் என ராமதாஸுக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதேபோல அருள் எம்.எல்.ஏ.வின் சட்டமன்ற கொறடா பதவி பறிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அன்புமணிக்கு எதிரான 11-வது தீர்மானத்தில், “தனக்கு பதவி ஒன்றும் தேவை இல்லை என்றும் தொண்டராக இருப்பேன் என்றும் மூன்றாண்டுகள் பதவி வகித்த பிறகு மீண்டும் தலைவர் பதவியை அபகரிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்” எனவும் அன்புமணியை விளாசி இருந்தனர்.
இக்கூட்டத்தில் அருள் எம்.எல்.ஏ. பேசுவதற்காக மைக் முன்பாக சென்ற போது, கையை உயர்த்தி சைகையால் அழைத்தார் ராமதாஸ். இதனால் பதற்றத்துடன் பவ்யமாக ராமதாஸ் முன்பாக குனிந்து நின்ற அருள் காதில், ‘என்னை நீக்க அய்யாவைத் தவிர யாருக்கும் அதிகாரமில்லை என சொல்லிடு’ என அட்வைஸ் செய்து அனுப்பினார். ஆனால் அப்போது ராமதாஸ் முன்பாக இருந்த மைக் ஆன் செய்யப்பட்டிருந்ததால் இது எல்லோருக்கும் கேட்கும்படியாகிவிட்டது.

பின்னர் பேசிய அருள் எம்.எல்.ஏ.வும், ஶ்ரீகாந்தியை புகழ்ந்து பேசி, ராமதாஸுக்காக கழுத்தை அறுத்து கொண்டு சாவேன் என ஆவேசப்பட்டார்.
கவுரவத் தலைவர் ஜிகே மணி பேசும் போது, கலைஞர் தம்மை திமுகவுக்கு கூப்பிட்டார்; ஜெயலலிதாவோ தமக்கு அடுத்த இடத்தையே தருவதாக சொல்லி அதிமுகவுக்கு அழைத்தார்.. ஆனாலும் தாம் பாமகவைவிட்டு போகவில்லை என நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.
அத்துடன், பூம்புகாரில் நடைபெறும் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு குறித்தும் இந்த செயற்குழுவில் தீவிரமாக பேசப்பட்டது. டாக்டர் ராமதாஸும் பூம்புகார் சென்று மாநாட்டுத் திடலை பார்வையிடுகிறார். அப்படியே கடலூர் மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழுவிலும் கலந்து கொள்கிறார். ஏற்கனவே கடலூர் கிழக்கு மாவட்ட பாமக பொதுக் குழுவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டதால் மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்கிறாராம். குடும்பத்துக்கு ஒரு பெண், நிச்சயம் பூம்புகார் மாநாட்டுக்கு வந்தாக வேண்டும் என்பதுதான் ‘குலசாமி’ டாக்டர் அய்யாவின் கட்டளை என்கின்றனர் பாமகவினர்.
ஓமந்தூர் திருமண மண்டபத்தில் பாமக செயற்குழு முடிந்ததும், பாமகவினர் ‘மெர்சலாகிப்’ போகும் அளவுக்கு சுவையான இளம் ஆட்டுக் கறி பிரியாணி விருந்து நடந்துள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் நடக்கும் விருந்தைவிட அட்டகாசமாக இருந்தது ‘செயற்குழு’ பிரியாணி என ஏப்பம் விட்டபடியே கலைந்தனர் ‘ராமதாஸ் பாமக’வினர்.
பாமகவின் இந்த செயற்குழு கூட்டத்தை அப்படியே அன்புமணிக்கு லைவ்வாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன ஸ்லீப்பர் செல்கள்.
இந்த செயற்குழு கூட்டம் முடிந்த உடனேயே, சென்னயை அடுத்த பனையூரில் அன்புமணியின் கச்சேரி ஆரம்பாகியது.
அன்புமணி தலைமையில் பாமகவின் ‘அரசியல் தலைமை குழு’ கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ராமதாஸ் நடத்திய செயற்குழு கூட்டம், சட்டவிரோதமானது என ஆணித்தரமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில்,” பாமக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி” என்பது அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டிருந்தது.
இப்படி தீர்மானத்தில் அழுத்தமான வரிகள் இடம் பெறுவதற்கும் ஒரு பின்னணி உண்டு..

அண்மையில் டெல்லி சென்றிருந்த அன்புமணி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். பின்னர் மூத்த வழக்கறிஞர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகளையும் சந்தித்து பேசினாராம் அன்புமணி. அப்போது, “2026 ஜூன் 26-ந் தேதி வரை அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு” என விளக்கம் தரப்பட்டதாம். அத்துடன், அன்புமணியை தேர்வு செய்த மா.செ.க்களில் ஒருசிலரை மாற்றினால் ஏற்றுக் கொள்ள முடியும்.. ஒட்டுமொத்தமாக மா.செக்களை மாற்றிவிட்டோம் என சொன்னால் தேர்தல் ஆணையம் அதனை ஏற்காது எனவும் விவரித்துள்ளனர்.
இதனையே வலியுறுத்தும் வகையில் அன்புமணி பாமகவின் ‘அரசியல் தலைமை குழு’ கூட்டத்தின் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படியே., தேர்தல் ஆணையத்திடம் தாம் பேசிய விவரங்களை ஒவ்வொன்றாக தமது ஆதரவாளர்களிடமும் வெளிப்படையாகவே விவரித்தார். இதனையும் தைலாபுரத்து ஸ்லீப்பர் செல்கள், டாக்டருக்கு லைவ் செய்து கொண்டிருந்தன.
சரி.. இப்படியே இருதரப்பும் மாறி மாறி பேசிக் கொண்டே இருந்தால் எப்படியாம்?
அதுவும் சரிதான்.. எப்படியாவது ஒரு தரப்பு தேர்தல் ஆணையத்துக்கு ‘அதிகாரப்பூர்வமாக’ போகப் போகிறது.. இன்னொரு தரப்பும் வந்துதான் ஆக வேண்டும்.. தேர்தல் ஆணையம் என்னதான் முடிவு செய்தாலும் நீதிமன்றத்துக்கும் இந்த விவகாரம் போகத்தான் செய்யும்.. ஆனாலும் எல்லாமும் ‘தங்களுக்கே’ சாதகமாக இருக்கும் என ‘வடக்கு இமயமலை’ போல நம்பி இருக்கிறதாம் மகன் பாமக என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டி விட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.