ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: விஜய் கைது? ஸ்டாலின் ‘ஸ்டிராங்’ முடிவு! சாவில் ‘டெல்லி சதி’- பகீர் மூவ்!

Published On:

| By Mathi

Digital thinnai

வைஃபை ஆன் செய்ததும் கனத்த இதயத்துடன் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

ஆமாப்பா.. ரொம்பவே அதிர்ச்சியாகவும் துயரமாகவும் இருக்கு..

ADVERTISEMENT

அதுக்கு மேல ரொம்ப கோபமாகவும் எல்லோரும் இருக்காங்க.. இப்படியான சம்பவம் இனி நடக்காம இருக்கனும்னு எல்லோரும் நினைக்கிறாங்க..

கரூரில் நேற்று 40 பேரை பலி கொண்ட நடிகர் விஜய்யின் தவெக பிரசார கூட்டத்தின் கொடுந்துயரம்தான் இன்னைக்கு எல்லா இடத்திலும் பேசப்பட்டு வருது.

ADVERTISEMENT

சரிப்பா.. இதுல என்னவெல்லாம் முக்கியமான விஷயங்கள் இருக்கு.. ஒவ்வொன்றாக சொல்லிடுமய்யா

ADVERTISEMENT

டெல்லியில் இருந்து தொடங்குறேன்.. கரூர் சம்பவம் தெரிஞ்ச உடனே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மோடி, அமித்ஷா, ராகுல், கார்கே என எல்லோரும் வேதனைப்பட்டு அறிக்கை விட்டாங்க..

அதேநேரத்தில் டெல்லி இரண்டு விஷயத்தை செஞ்சுருக்கு..

அதென்னப்பா ரெண்டு விஷயம்?

டெல்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு பேசி நிலவரத்தை கேட்டிருக்காங்க.. சிஎம்-ன் நடவடிக்கைகளை பற்றி விசாரிச்சிருக்காங்க.. அதுக்கு அப்புறமா, கரூர் சம்பவம் பற்றி ரிப்போர்ட் அனுப்புங்கன்னு ஆர்டர் போட்டிருக்காங்க..

இதே மாதிரி ஆளுநர் மாளிகைக்கும் டெல்லி போனடிச்சிருக்கு.. ஆளுநர் ரவியிடமும் கரூர் சம்பவம் பற்றி ஒரு அறிக்கை அனுப்புங்கன்னு டெல்லி கேட்க, அவரும் தமிழக அரசிடம் இப்ப அறிக்கை கேட்டிருக்கார்.

இதென்னய்யா ரொம்ப சீரியசா இருக்கிற மாதிரி தெரியுது..

மாதிரி இல்லை.. சீரியஸான விவகாரம்தான்.. இந்த சம்பவத்தை வெச்சு திமுகவுக்கு எதிராக எதையாவது செய்யலாம்னு நினைக்குதாம் டெல்லின்னு அங்கிருக்கும் சோர்ஸ்கள் சொல்றாங்க..

கரூர் விஜய் பிரசாரத்துக்கும் திமுகவுக்கும் எப்படிய்யா முடிச்சு போடுறாங்க?

கரூர் சம்பவம் என்ன நடந்துச்சுன்னு நாம எல்லோரும் டிவியில பார்த்து தெரிஞ்சுகிட்டோம்.. அதே நேரத்தில் விஜய் கட்சி தவெக, பாஜக இவங்க எல்லாம் வேறு ஒரு கதையை சொல்ல ஆரம்பிக்கிறாங்க.. அதைத்தான் டெல்லி கெட்டியாக பிடிக்க நினைக்குதாம்..

அந்த கதையையும் சொல்லுமய்யா

நம்மகிட்ட பேசுன டெல்லி சோர்ஸ்கள், “விஜய் கூட்டம் நடந்த போது கரண்ட் கட் பண்ணிட்டாங்க.. ஜெனரேட்டரை ஆன் செய்ய போனா அதுக்கான வயரையும் கட் பண்ணிவிட்டுட்டாங்க.அந்த நேரம் பார்த்து விஜய் மீது கூட்டத்துல இருந்து செருப்பை வீசுனாங்க.. இன்னும் கொஞ்ச பேர் கூட்டத்துல நுழைஞ்சு பிரச்சனை செஞ்சுட்டாங்க.. அப்ப போலீசும் தடியடி நடத்தியிருச்சு.. இதனாலதான் ஒட்டுமொத்த கூட்டமும் சிதறி ஓடி இவ்வளவு பெரிய துயரமாகிடுச்சு.. இது திமுகவோட திட்டமிட்ட சதி”ன்னு தவெக, பாஜக சொல்ற கருத்தைத்தான் டெல்லி உடும்பு பிடியாக பிடிச்சுகிட்டு அந்த கோணத்திலேயே இந்த பிரச்சனையை பார்க்குது என்கின்றனர்.

என்னப்பா அநியாயமா இருக்கே.. இத்தனை உசுரு போன நிலைமையில் விஜய்யும் அவங்க நிர்வாகிகளும் எங்கதான் போனாங்கப்பா?

இப்படியுமா இருப்பாங்க?ன்னு சொல்ற மாதிரிதான் நிலைமை.. கரூர் நெரிசலில் மக்கள் செத்துகிட்டு இருக்காங்கன்னு தகவல் தெரிஞ்சதும் கரூரை விட்டு விஜய் கூட புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனான்னு முக்கியமான எல்லோரும் எஸ்கேப்பாகிட்டாங்க..

விஜய் முகமே பயங்கரமான பேய் அறைஞ்சமாதிரி இறுகிப் போய்ட்டாரு.. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவுக்கு எல்லாம் என்ன செய்யறது? என்ன செய்ய கூடாதுன்னு எதுவும் புரியாமல் பயந்து போய் எங்கிட்டாவது போய்விடனும்னு குறியாக இருந்தாங்க..

நேத்து நைட் விஜய் வீட்டுக்கு போனவர்தான்.. அவருக்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் எல்லோரும் போனடிச்சு பார்த்து ஓய்ஞ்சுட்டாங்க.. அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமியை பிடிக்கலாம்னா அவரோட போன் ஸ்விட்ச் ஆப்.. ராத்திரி எல்லாம் தவெக 2-ம் கட்ட ‘தலைகள்’ அல்லாடிப் போயிட்டாங்க.. மீடியாக்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு இவங்க யாருக்கும் தெரியலை.. இன்னொரு பக்க பலி எண்ணிக்கையும் கூட கூட ரொம்பவே பதறிட்டாங்கப்பா..

எப்பதான் விஜய்யை பிடிக்க முடிஞ்சதாம்?

இன்னைக்கு காலையில 8 மணிக்கு மேலதான் விஜய் ஜான் ஆரோக்கியசாமி போனை ஆன் செஞ்சாரு..அதுக்கு அப்புறமாத்தான் விஜய்கிட்ட பேசியிருக்காங்க..

அந்த டிஸ்கஷனிலதான், இறந்தவங்களுக்கு அரசு ரூ10 லட்சம் தருதுன்னா நாம ரூ.20 லட்சம் தருவோம்னு அறிவிக்கலாம்னு முடிவெடுத்தாங்களாம். வேற என்ன முடிவுகள் எடுத்தாங்களாம்?

நாம சொன்ன மாதிரி, ‘கரூர் சம்பவமே திமுகவோட திட்டமிட்ட சதின்னு சொல்லி சிபிஐ விசாரணை கேட்கலாம்’னும் பேசி முடிவெடுத்திருக்காங்களாம்.. திமுக மேல பழியை மொத்தமாக போட்டு, சிபிஐ விசாரணை கேட்டு விஜய் அறிக்கை எந்த நேரத்திலும் வருமாம்..

ஓஹோ.. நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.. போலீஸ் கேஸ் எல்லாம் போட்டிருக்கே..

ஆமா.. கரூர் தவெக மா.செ, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார்னு பல பேர் மீது கேஸ் போட்டு வெச்சிருக்கு போலீஸ்.. அதுக்கு அப்புறமா, போலீஸ் தரப்பு தெளிவாக விளக்கம் மேல விளக்கம் கொடுத்துகிட்டே இருக்காங்க.. விஜய் என்ன செஞ்சாரு.. விஜய்கூட இருந்தவங்க செஞ்சது என்ன.. கூட்டம் எப்படி கூடுச்சு..என ஒவ்வொரு விஷயத்தையும் டீட்டெய்லாக சொல்லிகிட்டே இருக்கு போலீஸ்..

ஆமா.. நாகை, திருவாரூரில் இல்லாத கூட்டம் கரூரில் எப்படிப்பா வந்ததாம்?

இதுக்கு எல்லோரும் சொல்றது புஸ்ஸி ஆனந்தை தான்.. முதன் முதலாக திருச்சியில விஜய் பிரசாரம் தொடங்கினார்.. அது முதல் கூட்டம் என்பதால எல்லா மாவட்டத்துல இருந்தும் ஆட்கள் வரனும்னு ஆர்டர் போட்டிருந்தாரு புஸ்ஸி.. அது ரொம்பவே களேபரமாயிடுச்சு..

அதனால நாகை, திருவாரூர் பிரசாரத்துக்கு வெளியூர்காரங்க வேண்டாம்னு சொன்னாங்க..

ஆனால் நாகை, திருவாரூரில் கூட்டம் ரொம்ப கம்மியாகப் போக.. நாமக்கல், கரூருக்கும் வெளியூர்களில் இருந்து ஆட்களை வர சொல்லி இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.

இப்படி ஏடா கூடமா கூட்டத்தை காண்பிக்க புஸ்ஸி ஆனந்த் செஞ்ச வேலைதான் கரூரில் கூடிய பெருங்கூட்டம் என்கிறது தவெக வட்டாரங்கள்…

இப்ப புஸ்ஸி ஆனந்த் மீதும்தான் கேஸ் பைல் ஆகியிருக்கு..

போலீஸ் கேஸ் போட்டதுமே தவெக நிர்வாகிகள் கோர்ட்டுக்கு ஓடிட்டாங்க.. இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும் போது புஸ்ஸி ஆனந்தும் மற்றவங்களும் முன் ஜாமீன் கேட்கப் போறாங்களாம்..

சரி.. கரூரில் தவெக கேட்ட இடத்தை போலீஸ் தரலைன்னும் சொல்றாங்களே..

அப்படித்தான் அதிமுக எம்பி இன்பதுரை சொல்லிகிட்டு இருந்தாரு.. ஆனால் தமிழக அரசு தரப்புல, ஆதாரப்பூர்வமாக விஜய் கட்சி கேட்ட இடம் எது? போலீஸ் தந்த பெரிய இடம் எது? என விலாவாரியாக ஒரு ரிப்போர்ட்டை வெளியிட்டுருச்சு.. அதுல, “கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது. ஆனால், அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?’ என்று அதிமுக எம்.பி இன்பதுரை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டதாக காண்பிக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் இடம் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா. தவெக தரப்பில் அனுமதி கேட்டது லைட் ஹவுஸ் ரவுண்டானா, பேருந்து நிலைய ரவுண்டானா இல்லை. இரண்டும் வெவ்வேறு பகுதி”னு விளக்கம் தரப்பட்டிருக்கு..

அதேபோல ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதமும் பிரஸ்மீட்டில், ” தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான இடம்.. ஏன்ன ஒரு பக்கம் பெரிய பெட்ரோல் பங்க்.. இன்னொரு பக்கம் அமராவது ஆறும் பாலமும் இருக்குது.. அதே மாதிரி அவங்க கேட்ட உழவர் சந்தையும் குறுகலான இடம்தான்.. அதனால (அதிமுக) அண்மையில வேற ஒரு கட்சி கூட்டம் நடத்துன வேலுசாமிபுரம் பகுதியை சொன்னோம்.. அதையும் அவங்க ஒப்புக் கிட்டாங்க.. விஜய் பிரசாரத்துல அதிகமான போலீஸ் பாதுகாப்பு கரூரில்தான் போடப்பட்டிருந்தது.. விஜய் பேசும் போது கரண்ட் கட்டும் ஆகலை.. கல்வீச்சும் நடக்கலை” என விவரித்திருக்கிறார்.


ஓஹோ.. தமிழ்நாடு அரசு தரப்புல என்ன சொல்றாங்க?

சிஎம் ஸ்டாலினுக்கு கரூர் தகவல் கிடைச்ச உடனே ரொம்பவே அதிர்ச்சியாகிட்டாரு.. அப்பவே அமைச்சர்கள் மா.சு, அன்பில் மகேஷ் எல்லோரையும் கரூர் போக சொல்லிட்டாரு.. செ.பாலாஜிகிட்டயும் பேசி நிலவரத்தை கேட்டாரு.. நேற்று இரவே தலைமை செயலகம் போயி தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்திட்டு இரவோடு இரவாக அமைச்சர்கள் நேரு, வேலுவுடன் திருச்சி போய்.. அங்கிருந்து கரூருக்கு காரில் போயிட்டார்.



துணை முதல்வர் உதயநிதி, துபாய் பயணத்தை பாதியில ரத்து செஞ்சுட்டு இன்னைக்கு காலையில கரூர் வந்துட்டாரு..

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உதயநிதியை பார்த்து கதறிகிட்டே, ” சார் அவனுகளை விடாதீங்க சார்.. விடாதீங்க சார்..”னு கதறி அழுததுல ரொம்பவே உடைஞ்சு போயிட்டாரு..

அப்பவே சிஎம் ஸ்டாலினுக்கு போன் போட்டு, கரூர் நிலவரத்தை சொல்லிட்டு.. “யாராக இருந்தாலும் நாம விடக் கூடாது.. ரொம்ப கடுமையாக நடந்துக்கனும்னு” சொல்லி இருக்கிறார்..

ஓஹோ.. கேட்கவே நெஞ்சு கனக்குதய்யா.. இவ்வளவு சாவுக்கு காரணம்னு விஜய் மீது நடவடிக்கை எடுப்பாங்களா?

இதை பற்றி கோட்டை வட்டாரங்களில் பேசினோம்.. அப்போது,”புஷ்பா பார்ட் 2 சினிமா விவகாரத்தில் ஒரு ரசிகை செத்ததுக்கே அல்லு அர்ஜூனை தூக்குச்சு தெலுங்கானா போலீஸ்.. அதே மாதிரி விஜய்யையும் கைது செஞ்சாதான் சரியாக இருக்கும்னு அமைச்சர்கள் பலரும் சிஎம்கிட்ட சொல்லி இருக்காங்க.. போலீஸ் அதிகாரிகள் சிலரிடமும் பேசி இருக்காங்க.. என்றனர்.


அப்ப விஜய்யை கைது செய்வாங்களா? எப்போ கைது செய்வாங்களாம்?

பொறுமையா கேளும்.. “விஜய்யை கைது செய்ய எல்லா முகாந்திரமும் இருக்குன்னு அரசுக்கும் தெரியும்தான்.. அதேநேரத்துல அப்படி எல்லாம் கைது செஞ்சா அதையே அரசியலாக்கிடுவாங்கன்னும் சிஎம் நினைக்கிறாராம்.. அதனால தவெக நிர்வாகிகளே கோர்ட்டுக்கு போயிருக்காங்கதானே.. கோர்ட் என்ன முடிவு சொல்லுதோ அதையே செய்வோம்.. கோர்ட் ‘என்ன சொன்னாலும்’ கண்டிப்பாக செய்வோம்.. அது விஜய்யை கைது செய்ய சொன்னாலும் கூட.. என சிஎம் தரப்பில் திட்டவட்டமாக சொல்லப்பட்டிருப்பதால கோட்டையே பரபரக்கிறதா அதிகாரிகள் சொல்றாங்க என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share