ADVERTISEMENT

நடிகர் விஜய் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்

Published On:

| By Mathi

Sengottaiyan to join TVK

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று நவம்பர் 27-ந் தேதி தமது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்.

ADVERTISEMENT

அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து பயணித்தவர் கே.ஏ.செங்கோட்டையன். 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அமைச்சராகவும் பதவி வகித்தவர் செங்கோட்டையன்.

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போர்க்கொடி தூக்கினார் செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களான சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை. இதனால் அவரது கட்சி பதவியை பறித்தார் எடப்பாடி பழனிசாமி.

அத்துடன் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சந்தித்தும் பேசினார் செங்கோட்டையன். இதனையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் பலரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேருவதற்கு செங்கோட்டையன் முடிவு செய்துள்ளார்; நவம்பர் 26-ந் தேதி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன் நவம்பர் 27-ந் தேதி தவெகவில் இணைகிறார் என நமது மின்னம்பலம்தான் முதன் முதலாக செய்தியை பகிரங்கப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நேற்று நவம்பர் 26-ந் தேதி தமது எம்.எல்.ஏ. பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். இதன் பின்னர் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் அலுவலகத்துக்கு சென்ற செங்கோட்டையன் அவரை சந்தித்து நீண்டநேரம் பேசினார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தமது ஆதரவாளர்களுடன் கே.ஏ.செங்கோட்டையன் இன்று நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார். இதற்காக செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பேருந்துகளில் சென்னை வந்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியம் குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, உள்ளிட்ட பலரும் செங்கோட்டையனுடன் தவெகவில் இன்று இணைகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share