அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த
தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் இன்று நவம்பர் 27-ந் தேதி, நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தமது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் கே.ஏ.செங்கோட்டையன். இதனால் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது தொடர்பாக கடந்த சில வாரங்களாக செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தவெகவில் இணைய செங்கோட்டையன் முடிவு செய்தார். இந்த செய்தியை நமது மின்னம்பலம் முதன் முதலில் வெளியிட்டது.

இதன் பின்னர் நேற்று தமது எம்.எல்.ஏ. பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். மேலும் தவெக தலைவர் நடிகர் விஜய்யையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். திமுக் தரப்பில் அமைச்சர் சேகர்பாபு, செங்கோட்டையனை சந்தித்து திமுகவில் இணைய அழைப்பு விடுத்தார்; ஆனால் செங்கோட்டையன் மறுத்துவிட்டார்.
இந்த பின்னணியில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை முதல் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் வருகை தந்தனர். அவர்களை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார்.
இதன் பின்னர் செங்கோட்டையன், நடிகர் விஜய் உள்ளிட்டோரும் பனையூர் தவெக தலைமை அலுவலகம் வந்தனர். இதையடுத்து செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் உறுதி மொழி வாசிக்கப்பட்டது. பின்னர் செங்கோட்டையனுக்கு சால்வை மற்றும் தவெக துண்டு அணிவித்து உறுப்பினர் அட்டையை வழங்கினார் விஜய். பின்னர் செங்கோட்டையனி ஆதரவாளர்களான முன்னாள் அதிமுக எம்பி சத்யபாமா உள்ளிட்டோருக்கும் தவெக துண்டுகளை அணிவிக்கப்பட்டு கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டனர். தமது ஆதரவாளர்கள் ஒவ்வொருவரையும் விஜய்க்கு செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார்.
