டிஜிட்டல் திண்ணை: திக்.. திக்.. ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. காங்கிரஸுக்கு 28+1.. முடிவுக்கு வந்த இழுபறி!

Published On:

| By Mathi

DT DMK Congress Pact

வைஃபை ஆன் செய்ததும், “ஒரு கூட்டு
கிளியாக,. ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு”ங்கிற பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. திமுக- காங்கிரஸ் கூட்டணியில ‘சுபம்’ போட்டாச்சு ..

ADVERTISEMENT

ம்… திமுக கூட்டணியில காங்கிரஸுக்கு 28 சீட் ஒதுக்கி இருக்காங்க.. போன டைம் 25-ல் போட்டியிட்ட காங்கிரஸ் இப்ப 3 சீட் கூடுதலா வாங்கி இருக்கு..

இவ்வளவு நாளா இழுபறியா இருந்துச்சே.. இப்ப டக்னு முடிஞ்சுருச்சே…

ADVERTISEMENT

ஆமாய்யா.. பிப்ரவரி 28-ந் தேதி சோடங்கர் தலைமையிலான குழு முதல் கட்டமாக அதிகாரப்பூர்வமா அறிவாலயத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திட்டு போச்சு..

அப்ப, ”இந்த முறை கூட்டணியில புதிய கட்சிகள் வந்துருக்காங்க.. அதனால போன டைம் போட்டியிட்டதை விட கொஞ்சம் தொகுதிகளை நாங்க உட்பட எல்லா கட்சிகளுமே குறைக்கனும்.. அதனால போன டைம் 25-ல் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 23 இடங்கள்னுதான் திமுக குழு பேச ஆரம்பிச்சது.. இதை ஏத்துக்கவே முடியாதுன்ன காங்கிரஸுக்கு இந்த டைமும் 25 சீட் ஒதுக்குறோம்”னு திமுக சொன்னது..

ADVERTISEMENT

இந்த ஆஃபரை ஏத்துக்க முடியாதுன்னு மீடியாவுல சொன்னாரு காங்கிரஸ் கிரிஷ் சோடங்கர்.. அதோட கேசி வேணுகோபாலும் சோடங்கரும், தமிழக காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள்கிட்ட ”25 சீட்டுதான் தருவோம்னு சொல்லுது திமுக.. என்ன செய்யலாம்னு ராகுல் காந்தி உங்ககிட்ட கேட்க சொன்னாரு”ன்னு கருத்து கேட்டாங்க..

அதுல பெரும்பாலான எம்.பி, எம்.எல்.ஏக்கள், “திமுக கிட்ட பேசி கூடுதலா தொகுதிகளை வாங்குங்க.. விஜய் கூட கூட்டணிக்கு எல்லாம் போக வேண்டாம்.. கிரவுண்டல் அவருக்கு சப்போர்ட் இல்லை”ன்னு சொன்னதை நாம எழுதி இருந்தோம்..

அதே மாதிரி செல்வப்பெருந்தகையும், “விஜய் கூட கூட்டணிங்கிறது தற்கொலை முடிவு.. அப்படி முடிவு செஞ்சா நான் பதவியை ராஜினாமா செய்வேன்”ன்னு கேசி வேணுகோபால்கிட்ட சொன்னாரு..

இதுக்கு அப்புறம்தான் கார்கே, சோனியா எல்லாம் சீரியசா களத்துல இறங்குனாங்க..சோனியா காந்தி ராகுல் காந்திகிட்ட, “ப.சிதம்பரத்தை ஸ்டாலினை சந்திக்க அனுப்பறேன்”ன்னு சொல்ல, ராகுல் காந்தியோ, “சரி.. 25 சீட்டுன்னு சொல்லி இருக்காங்க.. அதைவிட கூடுதலா சீட் வாங்குங்க”ன்னு சொல்லிட்டார்.

இதுக்கு அப்புறமா, நேத்து ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்திச்சு பேசுனாரு.. இந்த பேச்சுவார்த்தையில , ”28+1; 29+2..ன்னு பேசப்பட்டது.. நேத்து இரவு செல்வப்பெருந்தகை வீட்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் ஸ்டாலின், கனிமொழி, சிதம்பரம் சந்திப்பு நடந்துச்சு.. அப்ப 30 சீட் கேட்குறாங்கன்னு ப.சிதம்பரம் சொல்ல நாளைக்கு உங்க குழுவை அறிவாலயத்துக்கு வர சொல்லுங்கன்னு ஸ்டாலின் சொல்லி இருந்தாருன்னு நாம பதிவு செஞ்சிருந்தோம்..

அங்கிருந்து வீட்டுக்கு திரும்பும் வழியிலேயே ஸ்டாலின், “காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கிறோம்னு சொல்லி இருக்கிறோம்.. அவங்க நாளைக்கு வரலைன்னா புதுக்கோட்டை அப்துல்லாவை பேப்பர்ஸை ரெடி பண்ண சொல்லுங்க”ன்னும் உத்தரவு போட்டாரு..

இன்னொரு பக்கம், ராகுல் காந்தி, கார்கே எல்லாருமே சிதம்பரத்துகிட்ட ”30 சீட்னு கேளுங்க… நாளைக்குள்ள பேசி முடிச்சிடுங்க”ன்னும் சொல்லிட்டாங்க..

இதனால திமுகவும் காங்கிரஸ் நாளைக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்னு அறிவிச்சது..

இன்னைக்கு காலையில எப்பவுமே கலகம் எழுப்புற மாணிக்கம் தாகூர், “வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம்..நல்ல நண்பர்களாக இருப்போம்”னு ஆச்சரியமா ஒரு ட்வீட் போட்டிருந்தாரு..

இன்னைக்கு காலையில இருந்து காங்கிரஸ் குழு வரும்னு திமுக எதிர்பார்த்தது. ஆனா காங்கிரஸ் குழு, அறிவாலயத்துக்கு வரவில்லை. பிற்பகல் வரை பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் டெல்லியிலதான் இருந்தார்; ராஜேஷ்குமார் கன்னியாகுமரியில இருந்தார்.

இதை பத்தி அந்த நேரத்துல விசாரிச்சப்ப, “ராகுல் காந்தி 30 சீட்தான் அப்படிங்கிறதுல உறுதியா இருக்காரு.. ஸ்டாலின் 28 தான் பைனல்னு சொல்றாரு.. அதனால இழுபறி”ன்னும் சொன்னாங்க..

அதுக்குப் பின்னர் மாலையில் திடீர் திருப்பமாக சென்னை ஏர்போர்ட்டில் செல்வப்பெருந்தகை பிரஸ்ஸை பார்த்தார். அவருடன் பேச்சுவார்த்தை குழுவின் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமாரும் இருந்தாங்க..

செல்வப்பெருந்தகை பிரஸ்ஸை சந்தித்து பேசுனப்ப, “பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கிறது.. டெல்லியில இருந்து பிரஸ் நோட் வரும்.. அதுக்கு வெயிட் பண்றோம்னு” சொன்னது ரொம்பவே புதிரா இருந்துச்சு.. பேச்சுவார்த்தைக்கும்பிரஸ் நோட்டுக்கும் என்ன தொடர்பு? ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப் போகுதா?ன்னும் சந்தேகம் கிளம்பிடுச்சு..

காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு சென்னையில லேண்ட் ஆன பிறகு, ஆழ்வார்பேட்டை வீட்டுல டிஆர் பாலு, எ.வ.வேலு, கனிமொழி, ஆ.ராசா ஆகியோர ஆலோசனை நடத்துனாரு ஸ்டாலின்.. இந்த ஆலோசனை முடிஞ்ச கையோடு அறிவாலயத்துக்கும் வந்தாரு..

அப்படி அறிவாலயத்துக்கு வரும் போது, ப.சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசினார் ஸ்டாலின். அவரிடமும் 28 சீட்தான் என்பதை பைனலாக சொன்னார்..

ப.சிதம்பரம் உடனே மல்லிகார்ஜூன கார்கேவை தொடர்பு, ஸ்டாலின் முடிவு 28 சீட்தான் என்று சொன்னதுடன் நீங்களும் ஸ்டாலினிடம் பேசுங்க என்றார்.

மல்லிகார்ஜூன கார்கேவும் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ‘கூடுதல் இடங்களை ஒதுக்கி தாங்க’ன்னு கார்கே கேட்டார்.. ஆனாலும் ஸ்டாலின் 28 சீட்தான்னு உறுதியா இருந்துட்டாரு.

இதனால காங்கிரஸ் இப்ப 28 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட்டுங்கிறதை ஏத்துக்கிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுருச்சு.. ஆனா இப்ப 28 சீட்டை ஒப்புக் கொண்ட காங்கிரஸ் அடுத்து,எந்தெந்த தொகுதிகள்னு வரும் போது என்னவெல்லாம் கேட்கும்? திமுகவோட பதில் என்னவாக இருக்கும்?னு ஏகப்பட்ட கேள்விகள் இருக்கய்யா என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share