டிஜிட்டல் திண்ணை: தமிழகத்தை நோக்கி… படையெடுக்கும் மோடி… எட்டிப் பார்க்கும் ராகுல்- ஸ்டாலின் கொடுத்த கேரன்ட்டீ

Published On:

| By Aara

digital thinnai modi visit again and again tamilnadu but ragul gandhi visit once

வைஃபை ஆன் செய்ததும் ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தி வருவது பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“தேர்தல் அறிவிப்புக்கு முன்பும் பின்பும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை இந்த மூன்று மாதங்களில் எட்டு முறை வந்து சென்றிருக்கிறார்.  ஏப்ரல் 9,10 தேதிகளில் கூட தமிழகம் வந்துள்ளார். பிரதமர் மோடி மட்டுமல்ல, பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் என ஒட்டுமொத்த பாஜகவே தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறது.

பாஜகவுக்கு இங்கே பெரிய அடித்தளம் இல்லாத நிலையிலும் கூட மோடியும் அவரது பரிவாரங்களும் தமிழகத்தை நோக்கி அடிக்கடி வந்து செல்லும் நிலையில்… கணிசமான வாக்கு வங்கியை தமிழ்நாட்டில் வைத்திருக்கிற காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர தலைவரான ராகுல் காந்தி ஏன் தமிழ்நாட்டின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்ற கேள்வி காங்கிரஸுக்குள்ளேயே எழுந்திருக்கிறது. மோடி சீசனுக்கு வரும் பறவை போல வருகிறார் என்று ஸ்டாலின் விமர்சித்தார். ஆனால் ராகுல், பிரியங்கா, கார்கே போன்றோர் இந்த தேர்தல் சீசனுக்கு கூட  தமிழ்நாடு பக்கம் வரவில்லை.

இந்த விமர்சனத்துக்கு மத்தியில் ராகுல் காந்தி தமிழ்நாட்டு தேர்தலுக்காக நாளை ஒரு நாள் (ஏப்ரல் 12) வருகிறார். அதுவும் பிற்பகல் திருநெல்வேலி வந்து அங்கே தென் மாவட்ட இந்திய கூட்டணித் தலைவர்களை ஆதரித்து பொதுக்கூட்டம், அதன் பின் மாலை கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் பொதுக்கூட்டம் அதன் பின் கேரளா சென்றுவிடுகிறார்.

Image

ஏன் ராகுல் காந்தி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவதில்லை? அதுவும் குறிப்பாக இந்தியாவில் நேரு குடும்பத்தினரின் ஆட்சி அமைய வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் கணிசமான ஈடுபாடு உள்ளது. இப்படி இருக்கும்போது ராகுல் காந்தி தமிழ்நாடு பிரச்சாரத்துக்கு வர வேண்டும், பிரியங்கா காந்தி வரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் வேண்டுகோள் வைத்தும் ராகுல் மட்டுமே,  வராமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காக வருகிறார்.

காங்கிரஸ் முக்கிய புள்ளிகளிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நினைத்தால் மாதம் ஒருமுறை ராகுல் காந்தியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர முடியும். அதேபோல காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவையும் அடிக்கடி இங்கு அழைத்து வர முடியும். ஆனால் அவர்கள் இப்போது தொடர்ந்து வட இந்தியாவிலேயே கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதற்கு காரணம் ஸ்டாலின் கொடுத்த உத்தரவாதம்தான். ‘தமிழ்நாட்டை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் வட இந்தியாவில் தீவிர கவனம் செலுத்துங்கள். இங்கே உங்கள் சக்தியை விரயம் செய்ய வேண்டாம். தமிழ்நாட்டுக்கு வரவே இல்லை என்ற குறை இருந்து விடக்கூடாது என்பதற்காக ஓரிரு முறை வாருங்கள்.

Ankit Mayank on X: "We have a strong team & a dynamic leader like Rahul Gandhi. Nothing can stop us from forming the Govt on 4th June. — Tamil Nadu CM MK

மற்றபடி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளையும் மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்து நாங்கள் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறோம். அதனால் எந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம்’ என்று ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் உத்திரவாதம் அளித்திருக்கிறார்.

இதன் அடிப்படையில் தான் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரவில்லை. இப்போது கூட தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு ஐந்து நாட்கள் முன்பு தமிழகம் வருகிறார்.

மோடிக்கு தமிழ்நாட்டில் எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் அவரே இங்கு அடிக்கடி வந்து  உத்தரவாதம் கொடுத்துச் செல்கிறார். ஆனால் ராகுல் காந்திக்கு ஸ்டாலின் கொடுத்த உத்தரவாதம் இருப்பதால் அவர் தமிழ்நாட்டைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை’ என்று கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி : ஜெயக்குமார் அட்டாக்!

தளபதி விஜயின் ‘GOAT’ படத்தில்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share