பொய் செய்தியா?: சைலேந்திர பாபு திடீர் ஆர்டர் – பதட்டமான பாஜக!

Published On:

| By Kavi

சமூக வலைதளங்களால் ஏற்படும் சண்டைகளையும், குற்றங்களையும் தடுக்க தமிழ்நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களில் அரசியல் குறித்த மோதல்களே அதிகம் நடக்கின்றன.

அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சூழலில், கட்சிகளுக்கு இடையிலான வார்த்தை போர் இல்லாத நாட்களே இல்லை எனலாம்.

இந்நிலையில், சமூக வலைதள பதிவுகள் தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பொய்யான தகவல்களைப் பதிவு செய்து அதன்மூலம் குழப்பங்களையும், கலவரங்களையும், காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும்,

அதேபோல் இணைய வழியில், பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை செய்வதையும் தடுப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்காக 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளரின் தலைமையின் கீழ் இயங்க விருக்கிறது.

dgp sylendra babu order

பொய்யான பதிவுகளைப் பரப்பும் விஷமிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து அவர்களது சமூக வலைதள கணக்குகளை முடக்கவும், கணினி சார்ந்த குற்ற வழக்குகளைப் பதிவுசெய்வதும் இந்தக் குழுவின் முக்கிய பணியாக இருக்கும்.

இந்த நடவடிக்கையின் மூலம் சாதி, மத, அரசியல் மோதல்களைத் தடுக்க முடியும் என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவின்பேரிலேயே காவல்துறை இந்த நடவடிக்கையை எடுப்பதாகப் பேச்சு அடிப்படுகிறது. இந்த நிலையில் காவல்துறையின் இந்த அறிவிப்புக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

மற்றவர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்க திமுக தலைமையிலான அரசு தடை விதிப்பதாக விமர்சனம் செய்கின்றனர்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில்,

‘ தமிழ்நாட்டில் பாஜக நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தேசியவாத குரல்களை ஒடுக்க முயல்கிறது திமுக. அதற்காக அடுத்தகட்ட மிரட்டலை கொடுத்துள்ளது அறிவாலயம்’ என குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக சமூக வலைதளங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பாஜக.

ஜெயப்பிரியா

இலக்கை நோக்கிப் பயணம்: வைரலாகும் டிஜிபி ட்வீட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share