மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்ததற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னையில் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. இந்தசூழலில் கண்ணகி நகரைச் சேர்ந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி, இன்று காலை வழக்கம் போல் பணிக்கு புறப்பட்டார். அப்போது தேங்கியிருந்த மழைநீரில் மின்வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் காலை வைத்த வரலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார். அவரது இழப்பு வரலட்சுமியின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் வரலட்சுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பலமுறை மின் வயர் அறுந்துகிடக்கிறது என்று புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததே வரலட்சுமியின் இறப்புக்கு காரணம என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தசூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கண்ணகி நகர் 11வது குறுக்குத்தெருவில் மின்கம்பிகள் சாலையில் அபாயகரமாக கிடப்பதை, பலமுறை மின்சார வாரியத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட திமுக அரசே இந்த உயிரிழப்புக்கு முழுமுதற் காரணம்.
இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோன பிறகு திமுக அரசும் தமிழ்நாடு மின்சார வாரியமும் விழித்துக் கொள்ளப் போகிறது?? தான் வழங்கிய வாக்குறுதியான தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காத இந்த அரசு தொடர்ந்து அவர்களை நிராகரிப்பதோடு நள்ளிரவில் காவல்துறையை வைத்து அவர்களின் போராட்டத்தை அப்புறப்படுத்தியது,
அவர்கள் நலனை பாதுகாக்காமல் அலட்சியமாக மின்சார கம்பியை பராமரிக்காமல் மழை நீரில் மின்சாரம் பாய்ந்தது தான் இச்சம்பவத்திற்கு முக்கிய காரணம் இச்சம்பவத்திற்கு அரசு தார்மீக பொறுப்பேற்று தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்திற்கு அரசு தற்போது வழங்கியுள்ள 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவதோடு, அவரின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே முழுவதும் ஏற்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி
சென்னை வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக வளர்ந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தான் கூறியிருந்தார். அதற்கு அடுத்த நாளே சென்னையில் பெய்த லேசான மழைக்கு தண்ணீர் பெருமளவில் தேங்கி, மின்சாரக் கம்பி துண்டிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார் என்றால், சென்னை மாநகரத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் எந்த அளவுக்கு மோசமாகவும், பலவீனமாகவும் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.
;திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மழை நீர் வடிகால் திட்டம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்கும் மழை நீர் வடியவில்லை. அதேபோல், விபத்து நடந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்த கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலைக்கு மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஆனால், மின்சாரத்துறையின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் அப்பாவி பெண் தொழிலாளி உயிரிழக்கக் காரணமாக அமைந்திருக்கிறது.
வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உயிரிழப்பால் மக்கள் மத்தியிலும், தூய்மைப் பணியாளர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதன் மூலம் அதை அடக்க திமுக அரசு முயல்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு சென்னை மாநகராட்சி மேயர், நகராட்சி நிர்வாகத்துறை, மின் துறை ஆகியவற்றின் அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோரின் அலட்சியமும், செயல்பாடின்மையும் தான் காரணம் என்பதால் இந்த இழப்பீட்டுத் தொகையை அவர்களிடமிருந்து வசூலித்து வழங்க வேண்டும்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
‘தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு சென்னை’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், இதயத்தின் மீது விழும் எலெக்ட்ரிக் ஷாக்கையும் கவனிக்க வேண்டும்! மறைந்த தூய்மைப் பணியாளரின் குழந்தைகள் அழும் கதறலொலியைக் கேட்ட பின்பாவது, விளம்பரத்தையும் சமூக வலைத்தளத்தையும் விட்டு வெளியே வந்து, இது போல மேலும் பல உயிர்கள் காவு வாங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, மழைக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்!
பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

இன்று தென் சென்னை கண்ணகி நகரில் காலை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் சகோதரி வரலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன். தாயை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கும் இரண்டு குழந்தைகளை பார்க்கும் பொழுது மனது வலித்தது. தனது துணைவியை இழந்து வாடும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரது கணவர் நிலைகுலைந்து நிற்கிறார்.
பரிதவித்து அழுது கொண்டிருக்கும் சுற்றத்தாரையும் சகப்பணியாளர்களையும் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. இது தடுக்கப்பட்டிருக்க வேண்டிய மரணம். ஏற்கனவே இரண்டு மூன்று நாட்களாக செப்பனிடப்படாத மின் கம்பியைப் பற்றி அந்தப் பகுதி மக்கள் புகார் அளித்திருந்தும் அதை சரி செய்யாததினால், நேற்று பெய்த மழையினால் நீர் தேங்கி அந்த மின் கம்பி தெரியாமல் போனது. அதில் கால் வைத்த உடனேயே வரலட்சுமி உயிரிழந்தார்.
அவர் உயிர் தியாகம் செய்ததாகவே சொல்ல வேண்டும், ஏனெனில் அதிக மக்கள் நடமாடும் அந்த இடத்தில் விடியற்காலம் அவர் இழந்த உயிர் பல பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளது. நான் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்: தூய்மை பணியாளர்கள் பணி செய்யும் பொழுது அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மழையில் பணி செய்யும்போது முழுமையான பூட்ஸ், குப்பைகளை அகற்றும்போது கையுறைகள், நோய் தொற்றாமல் இருக்க முகக் கவசங்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
மாநகராட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இனி இத்தகைய துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
சென்னை கண்ணகி நகர் அருகே மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு.
கண்ணகி நகர் மட்டுமல்ல எழில்நகர், பெரும்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் சேதமடைந்திருக்கும் மின்சாரக் கம்பிகள் குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே தூய்மைப் பணியாளர் உயிரிழக்க முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பு என்ற கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி போராட்டத்தை கலைத்த திமுக அரசு, தற்போது தன் நிர்வாக அலட்சியத்தால் பறிபோன இந்த உயிருக்கு என்ன பதில் சொல்ல காத்திருக்கிறது?
மேலும், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மட்டுமே தீர்வாகாது என்பதை உணர்ந்து, மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் சேதமடைந்து அபாயகரமான நிலையில் இருக்கும் மின் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மின்வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்
.