ADVERTISEMENT

அமித்ஷாவால் திமுகவின் வேரை அசைத்து கூட பார்க்க முடியாது : அமைச்சர்கள் பதில்!

Published On:

| By Kavi

நெல்லையில் திமுகவை விமர்சித்து அமித்ஷா பேசியதற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

நெல்லையில் நேற்று (ஆகஸ்ட் 22) பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊழல் நிறைந்த கட்சி திமுக என்றும் உதயநிதியை ஸ்டாலின் முதல்வராக நினைக்கிறார் அது நடக்காது என்றும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் அமித்ஷாவுக்கு அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இன்று (ஆகஸ்ட் 23)நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அமைச்சர் கே.என்.நேரு, “பொதுவாக விவசாயத்தில், வேரோடு பிடுங்கி நடவு செய்தால் அந்த பயிர் இன்னும் பெரியதாக, செழிப்பாக வளரும்.

ADVERTISEMENT

அதுபோல அவர்கள் பிடுங்க நினைத்தால் எங்கள் ஆட்சி இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.

இதுவரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இனியும் எதுவும் செய்ய முடியாது. திமுகவும் திமுக கூட்டணியும் தான் வெற்றி பெறும்.

ADVERTISEMENT

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது… முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வாரக முடியாது என்று அவர்கள் சொல்வது எல்லாம் அவர்களுடைய ஆசை. நாங்கள் மீண்டும் வென்று காட்டுவோம். இதே ஊரில் வென்று காட்டுகிறோம்.

இதுவரை மூன்று முறை அமித்ஷா தமிழ்நாடு வந்துவிட்டார். இவர் கூட்டணி ஆட்சி என்கிறார். எடப்பாடி பழனிசாமி இல்லை என்கிறார். இதற்கே இருவரும் விளக்கமளிக்கவில்லை” என்றார்.

எடப்பாடி பெயரையே அவ்வளவு பெரிய கூட்டத்தில் அமித்ஷா பயன்படுத்தவில்லையே என்ற கேள்விக்கு, “இதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இந்த கூட்டணியை அதிமுகவினரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாஜகவினரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொருந்தா கூட்டணி. மீண்டும் ஸ்டாலின் தான் முதலமைச்சர். ஒருகாலத்தில் மகளிர் ஆதரவு எம்.ஜி.ஆருக்குதான் என்று சொல்வார்கள். அவரைக் காட்டிலும் தற்போது மகளிர் ஆதரவு முதல்வருக்குதான் உள்ளது. திமுகவுக்கு போட்டியே இல்லை” என்று கூறினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “எங்களுக்கு தேர்தலை பார்த்து பயமில்லை. மக்களை சந்தித்து நாங்கள் ஆட்சிக்கு வர விரும்புகிறவர்கள். அவர்கள் குறுக்கு வழியில் ஏதேனும் வழக்கு போட்டு ஆட்சியில் இருப்பவர்களை சிக்க வைத்து பதவியை பறித்து ஆட்சிக்கு வர முடியுமா என்று கனவுகள் கண்டு கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கனவு காணவேண்டுமென்ற அவசியமில்லை.

அமித்ஷாவின் கணக்குகிற்கு எல்லாம் நான் பதில் சொல்லமுடியாது. தமிழ்நாட்டின் கணக்கு அவருக்கு தெரியாது. அகில இந்திய நிலவரம் வேறு, தமிழ்நாட்டின் நிலவரம் வேறு. 2026 தேர்தலில் மீண்டும் அவர்களுக்கு பாடம் புகட்டப்படும். அமித்ஷாவால் திமுகவின் வேரை அசைத்து கூட பார்க்க முடியாது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share