பாஜக பூத் கமிட்டி கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 22) நெல்லையில் நடைபெற்றது, இதில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்.
இதற்காக நெல்லையில் பல்வேறு இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ராமருடன் சித்தரித்த போஸ்டர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்த போஸ்டரை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இந்தநிலையில் நயினார் நாகேந்திரன் பாஜகவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 23) அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்று பகவான் ஸ்ரீ இராமருடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகளில் போட்டிருப்பதாக அறிந்தேன். அதனை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது என்று ஆணித்தரமாக நம்புபவன் நான். சேது சமுத்திரம் விவகாரத்தில் ராமபிரானைக் குறித்து தவறான முறையில் பேச்சுகள் வந்தபோது, சட்டமன்றத்திலேயே கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தவன் நான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் தாயாரைக் குறித்து சர்ச்சைப் பேச்சு எழுந்தபோதும், முதலில் அதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான்.

நமது தெய்வங்களின் மீது நான் வைத்திருக்கும் பக்தியும், மரியாதையும் இவ்வாறாக இருக்கும்போது, என்னை வைத்தே இவ்வாறு சித்தரித்து புகைப்படம் வெளியிடுவதை நான் மிகக்கடுமையாக கண்டிக்கிறேன். இன்னொரு முறை இது போல நடக்காமல் இருப்பதை அன்பார்ந்த தாமரை சொந்தங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
