’இட்லிக்கடை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று (செப்டம்பர் 20) அன்று கோவையில் நடைபெற்றது. திரளாக மக்கள் கூட்டம் இருக்க, அவர்கள் மத்தியில் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அவர்களது ஆரவாரத்தையும் அள்ளியது.
இரவு நேரத்தில் ட்ரெய்லர் வெளியானபோதும், உடனே அதனை ‘டீகோடு’ செய்ய ஒரு கூட்டமும் தங்களது வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டது.
ட்ரெய்லர் வெளியான அடுத்த நிமிடமே, ‘இட்லிக்கடை படத்தின் கதை இதுதான்’ என்று இணையத்தில் ஏற்கனவே உலவுகிற கதை ‘பொய்’ என்பது அப்பட்டமாகத் தெரிந்து போனது.
கிட்டத்தட்ட வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ போன்று மிகச்சாதாரணமான வாழ்வைச் சொல்கிற ‘ட்ராமா’ வகைமை படமாக இது இருக்கலாம் என்கிற எண்ணம் எழுந்தது.
’இட்லிக்கடை’ கதை என்னவாக இருக்கும்..?
கிராமத்தில் தாய், தந்தை வைத்திருக்கிற இட்லிக்கடையை விட்டுவிட்டு வெளிநாட்டு ஹோட்டலொன்றில் வேலை பார்க்கச் செல்கிறார் தனுஷ். அந்த ஹோட்டலின் முதலாளியாக சத்யராஜ் இருக்கிறார். அவரது மகனாக அருண் விஜய்யும் மகளாக ஷாலினி பாண்டேவும் இருக்கின்றனர்.
தனுஷின் உழைப்பைப் பார்த்து பிரமிக்கிற சத்யராஜ், அதனைத் தொடர்ந்து தனது மகன் அருண் விஜய்யிடம் குறிப்பிடுகிறார். தனது வாரிசு என்று பொறுப்பே இல்லாமல் இருப்பதாகக் கோபப்படுகிறார்.
ஷாலினி தனுஷை காதலிப்பது இன்னொரு கிளைக்கதை.
திடீரென்று ஒரு அசம்பாவிதம் நடக்க, வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்புகிறார் தனுஷ்.
தனுஷின் பெற்றோர் நடத்தி வந்த இட்லிக்கடை மூடிக் கிடக்கிறது. ஊரே அதன் பெருமை பாடுகிறது.
ஒருவழியாக அந்தக் கடையைப் புதுப்பித்து, பெற்றோரைப் போலவே அதனை நடத்த முற்படுகிறார் தனுஷ். அதனைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் அருண் விஜய் தன்னாலான இடையூறுகளைத் தருகிறார்.
இறுதியாக, தனுஷ் ஜெயித்தாரா, இல்லையா என்பதே ‘இட்லிக்கடை’ படத்தின் கதை.
இப்படத்தின் ட்ரெய்லர் பார்த்த எவரும் இதை அச்சுப்பிசகாமல் சொல்வார்கள். அதையே நோக்கமாகக் கொண்டு, இந்த ‘ட்ரெய்லர்’ கட் செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தக் கதையில் அருண் விஜய் எதற்காகத் தனுஷை ‘டார்ச்சர்’ செய்கிறார் என்பது கதை முடிச்சாக இருக்கக்கூடும் என்று சொல்கிறது ட்ரெய்லர்.
இதில் தனுஷின் பெற்றோராக ராஜ்கிரண் – கீதா கைலாசம் தோன்றியிருக்கின்றனர். அந்த பாத்திரங்களை இளம் வயதினராகக் காட்ட பிரிகிடா சாஹா உடன் ஒரு நடிகர் இடம்பெற்றிருக்கிறார். அது தனுஷ் தானா அல்லது வேறு ஏதேனும் புதுமுகமா என்பதுவே ‘இட்லிக்கடை’ ட்ரெய்லரில் மறைந்திருக்கிற குறிப்பிடத்தக்க விஷயம்.
நிச்சயமாக, படம் வெளியான பிறகு ‘யார் இந்த நடிகர்’ என்ற கேள்வி எழும் என்று நம்பலாம்.
இதே போன்று மறைக்கப்பட்ட அல்லது சொல்லப்படாத விஷயங்கள் சில ‘இட்லிக்கடை’யின் ஹைலைட்டாக இருக்குமென்று எண்ண வைக்கிறது ‘ட்ரெய்லர்’!