கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பூதங்குடி கிராமத்தில் நேற்று முன்தினம் (மே 26) இரவு போலீசார் அனுமதியுடன் ஆடல் பாடல் கச்சேரி நடந்தது. cuddalore sp angry words on inspector who not work
அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குறிஞ்சிப்பாடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பொதுவாகவே மாலை வேளைகளில் ஐஜி, டிஐஜி, எஸ்.பி ஆகிய போலீஸ் உயர் அதிகாரிகள் மைக்கில் (வாக்கி டாக்கி) வருவார்கள். அப்போது மாவட்ட போலீஸ் அதிகாரிகள் அவர்கள் சொல்வதை கேட்டுக்கொள்வார்கள்.
அதன்படி வழக்கம்போல நேற்று மாலை 8.30 மணிக்கு மைக்கில் வந்த எஸ்.பி. ஜெயக்குமார், ’நெய்வேலி உட்கோட்டம் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டரை AiR-ல் (வாக்கி டாக்கி) உடனடியாக வர சொன்னார்.
உடனே மைக்கில் வந்தார் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் தாமரைப் பாண்டியன்.
அப்போது எஸ்.பி, ”உனக்கு மண்டையில மூளையே இல்லையா… கேட்கிறேன்ல, உனக்கு மண்டைல மூளை இருக்கா இல்லையா?
நீங்க ஆடலும் பாடலும் கச்சேரிக்கு பாதுகாப்பு கொடுக்க முடிஞ்சா அனுமதி கொடுங்க, இல்லைனா கொடுக்காதீங்க.
நீங்க அனுமதி கொடுத்துட்டு, அப்புறம் உங்களால பாதுகாப்பு கொடுக்க முடியாததால தான் அந்த ஊர்ல கலவரம் ஆயிருக்கு. இப்போ ஐஜி என்னை புடிச்சி காய்ச்சி எடுத்துட்டாரு. நீ என்ன நெனச்சிட்டு இருக்க? ஏன் உன்னால ஸ்பாட்டுக்கு போக முடியாதா? அன்னைக்கு நைட்டு ஏன் போகல?” என கேட்டார்.
அதற்கு தாமரைப் பாண்டியன், “அய்யா அந்த நேரம் எனக்கு உடம்பு சரியில்ல, அதான் லீவு போட்டு போயிட்டேன்”னு சொன்னாரு.
”போயிட்டியா? அன்னைக்கு நைட்டே நாலு பேர தூக்கி ஸ்டேசன்ல உக்கார வச்சிருந்தனா, இன்னைக்கு காலைல பிரச்சனையே வந்துருக்காது. சரி எத்தன பேர அரெஸ்ட் பண்ணிருக்கீங்க?” எஸ்பி கேட்டாரு.
”ரெண்டு பேர் கைது பண்ணிருக்கோம், மீதமுள்ளவங்களையும் கைது பண்ணிருவோம்”னு இன்ஸ்பெக்டர் தாமரைப் பாண்டியன் சொன்னாரு.
அதற்கு எஸ்பி ஜெயக்குமார், ”உன்னப்பத்தி ரிப்போர்ட் வாங்கிட்டேன். சார்ஜ் கொடுக்குறேன்” என்று கோபமாக பேசினார்.
இந்த நிலையில் பூதங்குடி கிராமத்தில் என்ன நடந்தது என மின்னம்பலம்.காம் சார்பாக நாம் விசாரித்தோம்.
பொதுவாக கடலூர் ஜாதி கலவரம் நிறைந்த பதற்றமான மாவட்டம். இந்த நிலையில் நேற்று பூதங்குடி கிராமத்தில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்தது. இதனை பக்கத்து ஊரான வரதராஜன் பேட்டையைச் சேர்ந்தவர்கள் பார்க்க வந்தனர். (இரு ஊராரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள்)
அப்போது வரதராஜன் பேட்டை ஊரைச் சேர்ந்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, அங்கிருந்த பெண்களை கண்டுக்கொள்ளாமல் பாட்டுக்கு ஆபாச சைகையுடன் ஆடினர். அதனை பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தட்டிக்கேட்க, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது. இதனையடுத்து அங்கிருந்த போலீசார் கச்சேரியை நிறுத்தினர்.
தொடர்ந்து வரதராஜன் பேட்டையைச் சேர்ந்தவர்கள், மீண்டும் ஊருக்கு திரும்பி, அங்கிருந்தவர்களிடம் நடந்ததை கூறியுள்ளனர். அதனைக்கேட்டு சுமார் 20 பேர் பூதங்குடிக்கு கிளம்பி சென்று, ’எங்க ஊர் பசங்களையே அடிக்கிறீங்களா? நீங்க வரதராஜன்பேட்டை தாண்டி தானே போகனும், அப்போ பாத்துக்குறோம்’ என அங்கிருந்தவர்கள் அடித்து மிரட்டி விட்டு சென்றனர்.
இதனையடுத்து பூதங்குடியைச் சேர்ந்தவர்கள், வரதராஜன் பேட்டையைச் சேர்ந்தவர்கள் மீது குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவே புகார் அளித்தனர். ஆனால் அந்த ஸ்டேசன் போலீசார் இதை கண்டுக்கவில்லை.
இந்த நிலையில், பூதங்குடி கிராமத்தினர் வேறு வழியில்லாததால் நேற்று காலை வரதராஜன் பேட்டை வழியாக சென்றபோது. தங்கள் மீது புகார் கொடுத்தவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் தற்போது பதற்றம் நிலவுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் தான், இந்த கலவரம் குறித்து அறிந்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எஸ்.பி. ஜெயக்குமாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, குறிஞ்சிபாடி இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியனை கோபத்தில், மண்டையில் மூளை இருக்கானு கேட்டு, சார்ஜ் கொடுக்க இருக்கிறார். எஸ்.பி.
மேலும் தாமரைப் பாண்டியன் குறித்து நாம் விசாரித்தபோது, இவர் அரசியல்வாதி செல்வாக்கினால் திடீரென எஸ்.ஐ இன்ஸ்பெக்டர் ஆனவர். இவருக்கு சட்ட ஒழுங்கு பத்தி ஒன்றுமே தெரியாது” என்கின்றனர் சக இன்ஸ்பெக்டர்கள்.