சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 1) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பெளலிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. 8-வது ஓவரில் ஹர்ப்ரீத் ப்ரார் பந்துவீச்சில் ரிலே ரோஸோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ரஹானே. அடுத்ததாக களமிறங்கிய ஷிவம் துபே எல்பிடபிள்யூ அவுட்டாகி வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ஜடேஜாவும் 2 ரன்களில் அவுட்டாக, 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்னில் சிஎஸ்கே அணி தடுமாறியது.
அடுத்ததாக களமிறங்கிய சமீர் ரிஸ்வி, ருதுராஜ் ஜோடி தடுப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதனால் விக்கெட் எதுவும் விழாமல் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது.
15-ஆவது ஓவரில் ரபாடா பந்துவீச்சில் சமீர் ரிஸ்வி, ஹர்ஷல் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்தாக களமிறங்கிய மொயின் அலி, ருதுராஜ் ஜோடி அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
அதிரடியாக ஆடிய கேப்டன் ருதுராஜ் 18-ஆவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் அவுட்டானார். 48 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 62 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் தோனி களமிறங்கினார். தொடர்ந்து 19-வது ஓவரில் ராகுல் சஹர் ஓவரில் மொயின் அலி அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு சிஎஸ்கே அணி 162 ரன்கள் எடுத்திருந்தது. பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சஹர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“நடராஜனுக்கு டி20 உலககோப்பையில் இடமில்லையா?” – சரத்குமார் கேள்வி!