டெவால்ட் பிரெவிஸ் உடனான ஒப்பந்தத்தில் விதிமீறல் செய்ததாக அந்த அணியைச் சேர்ந்த மூத்த பவுலர் அஸ்வின் கூறிய குற்றச்சாட்டுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்று (ஆகஸ்ட் 16) விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஐபிஎல் சீசன் 2025 தொடக்கத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொதப்பியது. இதனால் தொடரின் இரண்டாம் பாதியில் ஆயுஷ் மாத்ரே, தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்களை அணியில் சேர்த்தது.
அதன் தொடர்ச்சியாக வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் மினி ஏலத்தில் புதிய வீரர்களுடன் ’சூப்பர்’ அணியைத் தேர்ந்தெடுக்க சிஎஸ்கே அணி தயாராகி வருகிறது.
இந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் பேசிய சிஎஸ்கே அணியின் மூத்த பந்துவீச்சளாரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய கருத்து சர்ச்சையாகி உள்ளது.

அஸ்வின் குற்றச்சாட்டு!
அவர் பேசுகையில், “கடந்த ஐபிஎல் சீசனில் டெவால்ட் பிரெவிஸ் சரியான நேரத்தில் சென்னை அணியில் சேர்ந்து சிறப்பாக விளையாடினார். அவருடன் இரண்டு, மூன்று அணிகளும் பேசி வருவதாகக் கேள்விப்பட்டேன், ஆனால் கூடுதல் பணம் செலுத்த முடியாமல் போனதால் அவர்கள் அவரை தவறவிட வேண்டியிருந்தது.
ஏலத்தில் அவருக்கு அடிப்படை விலை இருந்தது. பொதுவாக அப்போது ஏஜெண்ட்டுடன் நடக்கும் பேச்சுவார்த்தையின்போது, ‘ஒரு குறிப்பிட்ட தொகையை தந்தால் மட்டுமே அணியில் சேருவேன்’ என்று கூறுவார்கள்.
அதற்கு காரணம் ’அந்த சீசனில் நான் விளையாடினால், அவர்களது மதிப்பு அடுத்த ஏலத்தில் அதிகமாகும்’ என்பதுதான்.
அதனால் பிரெவிஸ் அணி நிர்வாகத்திடம், ’எனக்கு கூடுதல் பணம் தேவைப்படும்’ என்று கூறியிருக்கலாம். மேலும் சிஎஸ்கே அவருக்கு கூடுதல் பணம் கொடுக்கத் தயாராக இருந்ததால் அவர் உள்ளே வந்தார்” என அஸ்வின் கூறியிருந்தார்.
ஐபிஎல் விதிமுறைகளின் படி, ஒரு மாற்று வீரரை யாருக்கு பதிலாக எடுக்கிறார்களோ, அந்த வீரரின் ஏலத் தொகையை விட அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் செய்ய முடியாது.
அதன்படி கடந்தாண்டு ஜெட்டாவில் நடந்த ஏலத்தில் ரூ.2.2 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் தொடரின் நடுவில் காயமடைந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக தான் ஜெட்டா ஏலத்தில் விற்கப்படாத டெவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணிக்கு மாற்று வீரராக களமிறங்கினார்.
இந்த நிலையில் அஸ்வின் குற்றச்சாட்டு உண்மையா? விதிமுறைகளை மீறி பிரெவிஸ் அணியில் எடுக்கப்பட்டரா என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
விதிமுறைகளின்படி மட்டுமே ஒப்பந்தம்!
அதில், “இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 இன் போது மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்யும் போது அணி எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ஐபிஎல் விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்கு முழுமையாக இணங்கின என்று சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறது.
ஏப்ரல், 2025 இல், காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸ் 2.2 கோடி ரூபாய் லீக் கட்டணத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஐபிஎல் வீரர் விதிமுறைகள் 2025-27 இன் படி, குறிப்பாக ‘மாற்று வீரர்கள்’ என்பதன் கீழ் பிரிவு 6.6 இன் படி டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்,
அதில், “பத்தி 6.1 அல்லது 6.2 இன் படி கையொப்பமிடப்பட்ட மாற்று வீரரை லீக் கட்டணத்தில் பணியமர்த்தலாம், இது காயமடைந்த வீரருக்கு தொடர்புடைய சீசனுக்கு செலுத்த வேண்டிய லீக் கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. ஒரு சீசனின் போது மாற்று வீரர் சேர்க்கப்பட்டால், அவருக்கு உண்மையில் செலுத்தப்படும் லீக் கட்டணம், அவர் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு நடந்த தொடர்புடைய சீசனின் போட்டிகள் மற்றும் வீரர் ஒப்பந்தத்தின் கீழ் வேறு ஏதேனும் தொடர்புடைய விலக்குகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் வகையில் குறைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025 இல் தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ் சீசனின் நடுப்பகுதியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது, இந்த ஒப்பந்தம் போட்டி விதிமுறைகளுக்கு “முழுமையாக இணங்குகிறது” என்று கூறியது.
ஆர். அஷ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியதை அடுத்து இந்த அறிக்கை வந்தது.
21 வயதான அவரை அவரது தகுதியான விலையான 2.2 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கியதாக ஆர். அஷ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.
மேலும், “ஒரு சீசனின் போது ஒரு மாற்று வீரர் சேர்க்கப்பட்டால், அவருக்கு உண்மையில் செலுத்தப்படும் லீக் கட்டணம், அவர் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு நடந்த தொடர்புடைய சீசனின் போட்டிகள் மற்றும் வீரர் ஒப்பந்தத்தின் கீழ் வேறு ஏதேனும் தொடர்புடைய விலக்குகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள குறைக்கப்படும்” என்று விதிகள் கூறுகின்றன.
சிஎஸ்கே தனது அறிக்கையில், பிரெவிஸ் ஏப்ரல் 2025 இல் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், குர்ஜப்னீத் ஏலத்தில் பெற்ற அதே தொகை என்றும், மாற்று வீரர்கள் தொடர்பான 2025-27 ஐபிஎல் வீரர் விதிமுறைகளின் 6.6 வது பிரிவை இந்த செயல்முறை கடைபிடித்ததாகவும் கூறியது. இந்த விதிமுறைகளின் கீழ் கையொப்பமிடுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஏப்ரல் 18 அன்று வெளியிடப்பட்ட ஐபிஎல்லின் சொந்த ஊடக ஆலோசனையையும் ஃபிரான்சைஸ் சுட்டிக்காட்டியது.