ADVERTISEMENT

தெரு நாய்கள் விவகாரம்.. தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநிலங்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Court orders action in stray dog ​​case

தெரு நாய்கடி தொடர்பாக வழக்கில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக தனித்தனியாக 4 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களை காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் இதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி கவாய் இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றினார். இதையடுத்து 3 நீதிபதிகள் அமர்வு தெரு நாய்களை காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்தது.

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை, புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திய பின்னா், பிடிக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் அவற்றை விடுவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்தது.

மேலும் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற 3 நீதிபதிகள் அமர்வு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்து, நெரு நாய்கள் பிரச்சனை குறித்து அனைத்து மாநிலங்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கு இன்று (அக்டோபர் 27) காலை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகியவை மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் வரும் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share