ADVERTISEMENT

கோவையில் டிரோன்கள் பறக்க தடை.. காரணம் என்ன தெரியுமா?

Published On:

| By Pandeeswari Gurusamy

Drones banned from flying in Coimbatore

கோவையில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் அவர் கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதையடுத்து கடந்த செப்டம்பர் 9ம் தேதி புதிய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக நாளை கோவை வரும் நிலையில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார். நாளை மறுநாள் சொந்த ஊரான திருப்பூரில் தனது தாயை சந்திக்க உள்ளார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொடிசியா, ரெட்பீல்ட்ஸ், நகர்மன்றம், பேரூர் மற்றும் வடவள்ளி மருதமலை ஆகிய பகுதிகள் மற்றும் மிக முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவையில் இன்று காலை 8.00 மணி முதல் வரும் 29ம் தேதி இரவு 10.00 மணி வரையில் ஆளில்லா விமானங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

தடைசெய்யப்பட்ட கால அளவில் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share