சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 560 கிமீ தூரத்தில் மோந்தா புயல் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு மோந்தா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், கிண்டி, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 27) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் கடந்த 6 மணி நேரத்தில் மோந்தா புயல் மணிக்கு 15 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 560 கிமீ, காக்கிநாடாவுக்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்-தென்கிழக்கில் 620 கிமீ, விசாகப்பட்டினத்துக்கு(ஆந்திரப் பிரதேசம்) தென்-தென்கிழக்கில் 650 கிமீ, கோபால்பூருக்கு(ஒடிசா) தெற்கே 790 கிமீ மற்றும் போர்ட் பிளேருக்கு (அந்தமான் & நிக்கோபார் தீவுகள்) மேற்கே 810 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 28 ஆம் தேதி காலைக்குள் கடுமையான சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இந்தசூழலில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிதமானது முதல் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
