திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று நடைபெறும் பிரசித்திபெற்ற சூரசம்ஹார நிகழ்வைக் காண அலை அலையாக பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு என போற்றப்படுவது திருச்செந்தூர் முருகன் கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி- சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து முருகனை வழிபடுவர்.
இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதி நிகழ்வாக இன்று அக்டோபர் 27 மாலை சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது. திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறும் இந்த நிகழ்வைக் காண பக்தர்கள் அலை அலையாக குவிந்து வருகின்றனர். சூரசம்ஹார நிகழ்வுக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் கடற்கரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்காக 4,000-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
