பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து தன்னை கர்ப்பமாக்கி விட்டு தற்போது சேர்ந்து வாழ மறுப்பதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நீதி வழங்க வேண்டும் என்று தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ஜாய் கிரிஸில்டா தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டா பதிவில், “சென்னை நகர ஆணையரிடம் நான் ஒரு புகார் அளித்து 10 நாட்கள் ஆகிவிட்டன. அதில், பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து 10 நாட்கள் கடந்துள்ளது.
நான் இப்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன். என் பார்வையற்ற தாயாருடன் நானே நேரடியாக ஆணையர் அலுவலகத்திற்கு சென்றேன். ஆனால், என் புகாரின் நிலை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜூக்கு விஐபி அந்தஸ்து அளிக்கப்படுகிறது. எனக்கு எதிராக அநாகரிகமான, ஆபாசமான மற்றும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அப்பா, உங்கள் அரசாங்கத்தை என்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் நம்புகின்றனர். நான் கைகூப்பி வேண்டுகிறேன், தயவு செய்து தலையிட்டு நீதி வழங்குங்கள். ஒரு விஐபி அல்லது பிரபலம் இப்படிப்பட்ட குற்றத்தை பெண்களுக்கு எதிராக செய்துவிட்டு, எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுற்றித்திரிய முடியுமா? என் பிறக்காத குழந்தைக்கும், எனக்கும் நீதி வேண்டும்.” என்று வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.