குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் அனுமதியின்றி தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இசைஞானி இளையராஜா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இளையராஜா சார்பில் வழக்கறிஞர் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், மைத்திரி மூவி மேக்கர் தயாரிப்பில் நடிகர் அஜித் உள்ளிட்டோர் நடித்த குட் பேட் அட்லி திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ இதோ ஆகிய 3 பாடல்கள் இளையராஜாவின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது பதிப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. மேலும் அனுமதி பெற்றதாக கூறப்படும் அந்த உரிமையாளர் யார்? என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும், அதனால் இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்த தடை விதித்து அவற்றை நீக்க வேண்டும் என்றும், மேலும் பாடல்களை பயன்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது குட் பேட் அட்லி திரைப்படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
