மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி விட்டார்- ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Complaint against Madhampatty Ranga Raj

மாதம்பட்டி ரங்கராஜ் கோயிலில் திருமணம் செய்து விட்டு சேர்ந்து வாழ மறுப்பதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார்.

கோவை மாதம்பட்டி பகுதியில் பிறந்தவர் ரங்கராஜ். இவர் சமையல் துறையில் படிப்பை முடித்த பின்னர் தந்தையின் சமையல் தொழிலை எடுத்து நடத்த தொடங்கினார். பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் இல்ல விழாக்களில் சமைக்க தொடங்கியதில் பிரபலமானார்.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்கஸ் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கேசினோ, மிஸ் மேகி, பென்குயின் போன்ற படங்களில் நடித்திருந்த போதிலும் சமையல் தொழிலில் வெற்றிகரமாக வலம் வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.

ADVERTISEMENT

இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஸ்ருதி ஒரு வழக்கறிஞர்.

இதற்கிடையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் உடன் திருமண கோலத்தில் இருந்த புகைப்படங்களை வெளியிட்டு 6 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

ADVERTISEMENT

இதையடுத்து சில நாட்களுக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து பிறக்க உள்ள குழந்தைக்கு ரஹா ரங்கராஜ் என பெயரிட இருப்பதாக ஒரு புகைப்படம் ஒன்றை ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி விட்டார் என ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் சென்னை கோயிலில் திருமணம் செய்த ரங்கராஜ் கர்ப்பமாக்கி விட்டு தற்போது சேர்ந்து வாழ மறுக்கிறார் என புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை. முதல் மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறியதால் அவரை திருமணம் செய்தேன். எங்களுக்கு திருமணம் நடந்து ஓராண்டு ஆகிறது. இப்போது நான் 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன். கடந்த ஒன்றரை மாதமாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கடந்த வாரம் அவரை நேரில் சந்திக்க முயன்றபோது என்னை அடித்தார்” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share