தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக வலம் வரும் ரஜினி, கமல் இருவரும் 40 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிப்பதாக அறிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த அபூர்வராகங்கள் படத்தில் நடிகர் ரஜினி முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே என 18 படங்களில் இருவரும் இணைந்து நடத்திருந்தனர். கடைசியாக 1985ம் ஆண்டு வெளியான ஜெராஃப்தார் என்ற இந்தி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து தற்போது வரை இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இது நாங்கள் இணைந்து எடுத்த முடிவுதான் என்பதை ரஜினி, கமல் இருவரும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என தகவல்கள் வெளியானது. இந்த தகவலை நடிகர் கமல் ஹாசன் சைமா விருது விழாவில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தரமான சம்பவம் என்பதில் தான் ஆபத்தே இருக்கிறது. தரம் எப்படி இருக்கிறது என்பதை ஆடியன்ஸ் தான் சொல்ல வேண்டும். நாங்கள் இருவரும் இணைந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நாங்கள் விரும்பி பிரிந்தோம்.
காரணம் ஒரு பிஸ்கட்டை பிரித்து ஆளுக்கு பாதியாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆளுக்கு ஒரு பிஸ்கட் வேண்டும் என்று நினைத்தோம். அதை வாங்கி நன்றாக சாப்பிட்டோம். இப்போது மறுபடியும் அரை பிஸ்கட் போதும் என்ற சந்தோஷம் எங்களுக்கு உள்ளது. எனவே நாங்கள் ஒன்றாக இணைய உள்ளோம். எங்களுக்கு இடையேயான போட்டி நீங்கள் ஏற்படுத்தியது தான். எங்களுக்கு அது போட்டியே கிடையாது எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். அப்போதே நாங்கள் முடிவு செய்து விட்டோம். இப்படித்தான் நாங்கள் இருக்க வேண்டும் என்று அப்படித்தான் அவரும் இருக்கிறார். நானும் இருக்கிறேன்.
வியாபார ரீதியில் தான் இப்போது இணைகிறோமே தவிர எங்களுக்குள் இது எப்போதோ நடக்க வேண்டியது. இப்போதாவது நடக்கிறதே நடக்கட்டும் என்பது போலத்தான் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் ஒருவர் படத்தை ஒருவர் தயாரிக்க எப்போதும் விரும்பி இருக்கிறோம். ஆனால் இப்போது வேண்டாம். அப்போது வேண்டாம் என்று நாங்களே எங்களை தடுத்துக் கொண்டிருந்தோம்.” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல் என்ற தமிழ் சினிமாவில் இரு பெரும் உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளது அவர்களது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
