திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்கொலையை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதிமுறைக்கு மாறாக இரவு நேரத்தில் சாமி தரிசனம் செய்த சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Coimbatore Temple
திருமலா பால் நிறுவனத்தில் நடந்த முறைகேடு விவகாரத்தில் நவீன் மீது புகாரளித்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நவீன் மர்ம மரணத்தை தொடர்ந்து துணை ஆணையர் பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் பாண்டியராஜன், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடை சாத்திய பிறகு இரவு நேரத்தில் வழிபாடு செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பக்தர் ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
யார் இந்த பாண்டியராஜன்?
தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் பாண்டியராஜன் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர். கடந்த 2005-ம் ஆண்டு குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்று ஆண்டிபட்டியில் பயிற்சி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். பெரியகுளம், உத்தமபாளையம் பகுதிகளில் பணியாற்றினார். திருச்சுழி, பழனி ஆகிய பகுதிகளில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்திருக்கிறார்.
பழனியில் பாண்டியராஜன் பணியாற்றியபோது கேரளாவுக்கு மணல் கடத்தப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. பின்னர் விழுப்புரம் ஏ.டி.எஸ்பி.யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து திருப்பூரில் பணியமர்த்தப்பட்டார்.
திருப்பூரில் பணியாற்றிய போது 2017ம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை அடித்த வீடியோ பரவி கடும் கண்டனத்திற்கு உள்ளானார்.
இதேபோல் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை ஊடகங்களில் வெளியிட்டார். இதனால் நீதிமன்றத்தின் கண்டணத்திற்கு ஆளானார்.
தற்போது நவீன் உயிரிழந்த விவகாரத்தில், பாண்டியராஜன் முறையான நடவடிக்கை எடுக்காமல் விசாரணை செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பாண்டியராஜன் கடந்த ஞாயிறன்று இரவு கோவை பட்டீஸ்வரர் கோயிலில் இரவில் நடை சாத்தப்பட்ட பிறகு ஆகம விதிக்கு மாறாக கோயிலை திறக்க வைத்து சாமி தரிசனம் செய்தார் என கூறப்படுகிறது. இதை அங்கிருந்த பக்தர் ஒருவர் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.