பாய்ச்சலின் வேகத்தை விஸ்தாரமாக மாற்றுவதற்கு முன்னதாகப் புலியானது பதுங்கும் என்று சொல்லப்படுவதுண்டு. படத்தில் இதனைக் காட்சியாகக் காட்டுவது கடினம் என்பதால், ஊடகங்களில் ஹீரோக்களின் நிதானத்தையும் பொறுமையையும் விளக்க இந்த உதாரணம் அவ்வப்போது பயன்படுத்தப்படும். அந்த வகையில், தெலுங்கு திரையுலகில் சில மாதங்களாக அமைதி காத்து வந்தார் சிரஞ்சீவி. போலா சங்கர், ஆச்சார்யாவின் தோல்விகளால் கொஞ்சம் நிலைகுலைந்தாலும் ‘வால்டர் வீரய்யா’வின் வெற்றியானது அவரைச் சமநிலைக்கு வரச் செய்தது.
சிரஞ்சீவியின் பிறந்தநாளையொட்டி, அவர் நடிக்கிற ‘விஸ்வாம்பரா’ படத்தின் ‘க்ளிம்ப்ஸ் வீடியோ’ சமீபத்தில் வெளியானது.
அதன் தொடர்ச்சியாக, இயக்குனர் அனில் ரவிபுடி உடன் சிரஞ்சீவி இணைகிற படத்தின் பெயர் ‘மன சங்கர வரபிரசாத் காரு’ என்ற தகவல் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது. உடனே, ‘இது என்னடா வம்பா போச்சு’ என்கிற ‘ரேஞ்சில்’ அந்த விஷயத்தை அடியோடு மறுத்தார் அனில் ரவிபுடி. ’டைட்டிலை நாங்களே அறிவிப்போம்’ என்று அடம்பிடித்து வந்தார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், தங்களது படத்தின் பெயரை அவர் அறிவித்தார். டைட்டில் என்ன தெரியுமா? அதே ‘மன சங்கர வரபிரசாத் காரு’ தான்.
அதனைக் கண்டதும், ‘இது கவுண்டமணி பிச்சை போடுற காமெடி மாதிரில்லா இருக்குது’ என்ற எண்ணமே எழுந்தது. ‘நீ யாரு பிச்சை இல்லைன்னு சொல்றதுக்கு, நான் சொல்றேன் உனக்கு பிச்சை இல்ல’ என்று அந்த ‘காமெடி காட்சி’ நீளும். கிட்டத்தட்ட அதே டைப்பில் ‘டைட்டிலை நீங்க சொல்லக்கூடாது.. நாங்க தான் சொல்லுவோம்’ என்று உணர்த்தியிருந்தார் அனில்.
சங்கராந்தி அன்று, அதாகப்பட்டது பொங்கல் வெளியீடாக வரும் இப்படத்தில் சிரஞ்சீவி உடன் வெங்கடேஷும் ஒரு சில காட்சிகளில் நடிக்க இருக்கிறாராம். ’இருவரும் வருகிற காட்சிகளுக்கு தியேட்டர் அதிரும்’ என்று இப்போதே ‘பில்டப்’ கூட்டத் தொடங்கிவிட்டார் அனில் ரவிபுடி.
இந்த இரண்டு படங்கள் மட்டுமல்லாமல், இயக்குனர் பாபி கொல்லி உடன் இணைந்து இன்னொரு படத்திலும் நடிக்கிறார் சிரஞ்சீவி. இப்போதைக்கு ‘மெகா 158’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ’ரத்தம் தெறிக்கிற கேங்ஸ்டர் ஆக்ஷன்’ படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆக, சிரஞ்சீவி பாயத் தயாராகிவிட்டார். அதற்கு நிச்சயம் ‘சபாஷ்’ சொல்ல வேண்டும்.
என்ன, இன்றைய தலைமுறையின் எதிர்பார்ப்பை மீறியதாக அந்த பாய்ச்சல் இருக்க வேண்டும். ஹீரோயின் உடன் டூயட், காமெடி காட்சிகளில் திணிக்கப்படும் கவர்ச்சி நடிகைகள், பறந்து பறந்து வில்லன் கூட்டத்தைப் பந்தாடுகிற பைட்டுகளை கொஞ்சம் ‘கட்’ பண்ணி, தோற்றத்திற்கேற்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலே போதும். ‘மினிமம் கியாரண்டி’ வெற்றியில் ஒரு படம் கிடைத்துவிடும். ரஜினிகாந்த் போன்று தன்னைத்தானே கிண்டலடித்துக் கொள்கிற உத்தியைப் பின்பற்றினால் இன்னும் பல படிகள் மேலே ஏறலாம்.
சிரஞ்சீவி என்ன செய்யக் காத்திருக்கிறார் என்பது ‘விஸ்வாம்பரா’ வெளியானால் பட்டவர்த்தனமாகிவிடும்..!