குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு ரத்து!
திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதன்படி கடந்த ஜனவரி 12ஆம் தேதி அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் கீழ் சட்டப்படி குற்றமல்ல.
அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தீர்ப்புக்கு எதிர்ப்பு!
இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது.
அந்த தீர்ப்பு ’கொடூரமானது’!
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்கா தனது வாதத்தில், “குழந்தைகள் ஆபாச பட வழக்கில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போதுள்ள சட்டங்களுக்கு முரணானது” என்று வாதிட்டார்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ’கொடூரமானது’ என்று கூறிய உச்சநீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளிடம் இருந்தும் இன்னும் 3 வாரங்களில் பதில் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கு விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மூத்த வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்கா பேசுகையில், “குழந்தைகள் அடங்கிய ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
எனினும் உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது தெளிவான குற்றம் என்றும், அதுகுறித்து பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கினை தானாக முன்வந்து விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை ’இதுபோன்ற நீதிபதிகள் எங்களிடம் இருக்கிறார்கள் கடவுளுக்கு நன்றி’ என்று பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Thalapathy 69 ‘தடை அதை உடை’… விஜயை இயக்கப்போகும் ‘டாப்’ இயக்குநர்!
”மோடி தான் மீண்டும் பிரதமர்”: பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்