பாஜகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 11) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள்ளாக தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பாக தங்களது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பச்சமுத்துவின் ஐ.ஜே.கே., ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஓ,பன்னீர்செல்வத்தின் அதிமுக தரப்பும் மற்றும் டிடிவி தினகரனின் அமமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை உறுதிபடுத்தியுள்ளார்.
பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு!
அவர் பேசுகையில், “ பாஜக – அமமுக கூட்டணி உறுதியாகிவிட்டது. கடந்த 2 மாதங்களாக பாஜக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். அப்போதே எங்களுடைய எல்லா கோரிக்கைகளையும் தெரிவித்து வந்தோம்.
இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்துள்ள மத்திய முன்னாள் அமைச்சர்கள் விகே சிங் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோரை என்னால் நேரில் சந்திக்க முடியவில்லை.
எனினும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கிஷன் ரெட்டி இருவரும் என்னுடன் இன்று தொலைபேசியில் உரையாடினர். அவர்களிடம் பாஜக கூட்டணிக்கு அமமுக கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவை நான் தெரிவித்துள்ளேன். வரும் தேர்தலில் பாஜக வென்று மோடி 3வது முறையாக பிரதமராக ஒரு அணிலைப் போல் உதவுவேன்.
குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறோம்!
யார் பிரதமராக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நாங்கள் பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளோம். எங்களுக்கு எத்தனை தொகுதி என்பது பிரச்சனையல்ல. தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்பேன்.
பாஜக எங்களை தாமரை சின்னத்தில் நிற்க நிர்பந்திக்கவில்லை. எங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள குக்கர் சின்னத்தில் தான் உறுதியாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம்.
எந்த காலத்திலும் திருந்தாத துரோக புத்தியுடைய எடப்பாடி பழனிசாமியுடன் பயணிப்பது என்பது சாத்தியமில்லை. அவர் திருந்தி வந்தால் அப்போது பார்க்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Chennai Metro நிலையங்களில் வரப்போகும் சூப்பர் வசதி!
“தமிழ்நாட்டுக்கு மோடி வெறும் கையால் முழம் போடுகிறார்” : ஸ்டாலின்
தண்டனை நிறுத்திவைப்பு : முதல்வரைச் சந்தித்த பொன்முடி
சிறை தண்டனை நிறுத்திவைப்பு : மீண்டும் எம்.எல்.ஏ வாகும் பொன்முடி?