காஞ்சா இல்லய்யா ஷெப்பர்ட்
ஏப்ரல் 30 அன்று, மோடி அரசாங்கம் வரவிருக்கும் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிக் கணக்கெடுப்பைச் சேர்க்கவிருப்பதாகத் திடீரென்று முடிவெடுத்தது. Caste Census A Real Project

ஆர்எஸ்எஸ்ஸை நிறுவிய கே.பி. ஹெக்டேவாரும் அவருக்குப் பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற எம்.எஸ். கோல்வால்கரும் பாஜக அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையை ஒருபோதும் கற்பனை செய்துபார்த்திருக்க மாட்டார்கள்.இந்த இரண்டு தலைவர்களும் மகாத்மா ஜோதிராவ் பூலே காலத்தில் பூனா பிராமணர்கள் கொண்டிருந்த அதே மனநிலையைக் கொண்டிருந்தனர்.
சாதி அமைப்பு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி என்று அவர்கள் அனைவரும் நம்பினார்கள். சூத்திரர்கள்/தலித்கள் ஒருபோதும் சமத்துவத்தைக் கோர முடியாது என்பதே அவர்களின் நிலைப்பாடு. அனைத்து ஆர்எஸ்எஸ் தலைவர்களும் ஆன்மிகம், சமூகம், கல்வி ஆகியவற்றில் சமத்துவம் என்பது இந்தியப் பாரம்பரியத்திற்கு அந்நியமானது என்று நம்பினார்கள்.சாதிக் கணக்கெடுப்பு யோசனை, சாதி ஒழிக்கப்பட்டு இந்தியச் சமூகத்தை முழுமையான சமத்துவத்தை நோக்கிச் செலுத்த வேண்டும் என்ற நவீன ஜனநாயக நம்பிக்கை முறையை அடிப்படையாகக் கொண்டது.
இது மகாத்மா பூலே, அம்பேத்கர் ஆகியோரின் இலட்சியங்களில் ஒன்றாகும்.சாதி தெய்வீகத் தலையீட்டால் உருவாக்கப்பட்டது, அதை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதே சனாதன தர்மத்தின் அடிப்படைத் தத்துவம். ஜனநாயகமோ, சாதி, மத, பாலின வேறுபாடின்றி ஒவ்வொரு தனிநபரும் சமமாக வாழ வேண்டும் என்று நம்புகிறது. இந்துத்துவச் சிந்தனை முறை அத்தகைய ஜனநாயக இலட்சியங்களுக்கு எதிரானது.

ஜனசங்கத்தையும் பின்னர் பாஜகவையும் உருவாக்கிய பிறகு, ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகள், அரசியல், ஆன்மிகத் துறைகளில் சாதி அடையாளத்தை வெளிப்படுத்த அனுமதிக்காமல், உயர் சாதியினரின் நன்மைக்காக மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள். தேசிய அளவிலான சாதிக் கணக்கெடுப்பு ஆர்எஸ்எஸ்/பாஜகவின் ஆதாரமான சித்தாந்தத்திற்கு எதிரானது.
சாதிக் கணக்கெடுப்பும் காங்கிரசும் Caste Census A Real Project
கடைசியாக 1931ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியால் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதி வாரியாகத் தரவு சேகரிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைவதற்காகப் போராடிவந்த காலம் அது.
பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களும் ஆர்எஸ்எஸ் உயர் சித்தாந்தத் தலைவர்கள் சாதிப் பிரச்சினைகளில் கொண்டிருந்த அதே மனநிலையைக் கொண்டிருந்தனர்.அவர்களும் சாதி ஒழிக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே, பிரிட்டிஷ் அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதியைக் கணக்கிட்டதை இந்தியப் பாரம்பரியத்திற்கும் இந்து சமூக ஒழுங்கிற்கும் எதிரானதாக அவர்கள் பார்த்தனர்.

சாதியைக் கணக்கிடுவது பிரிட்டிஷ்காரர்களின் சதியாகக் கருதப்பட்டது. அரசியல் நிர்ணய சபையிலும், அரசியல் சார்புகளைத் தாண்டி நீக்கமற நிறைந்திருந்த பழமைவாத சனாதன சித்தாந்தவாதிகளிடையே சாதி என்ற வார்த்தையைப் பயன்படுத்த அம்பேத்கர் நிறைய போராட வேண்டியிருந்தது. அந்தக் காலத்தின் உயர் சாதித் தலைவர்களில், ராம்மனோகர் லோஹியாவைத் தவிர, வேறு யாரும் சூத்திரர்/தலித் விடுதலைப் பிரச்சினையில் வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.
பிரதமராக நேரு பிற பிரச்சினைகளைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார். சாதி அமைப்பைப் பற்றி அவர் அதிகம் பேசவில்லை. சமூக சீர்திருத்தத்தைக் காட்டிலும் தகுதிக் கோட்பாட்டையே அவர் நம்பினார். ஆனால் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் அரசியல் நிர்ணய சபைக்கு வெளியேயும் உள்ளேயும் இதைப் பற்றிப் பேசிவந்தார். 1953வரை அரசாங்கத்தில் இருந்தபோது அவர் அந்த முயற்சியைத் தொடர்ந்தார்.அவர் புத்த மதத்திற்கு மாறியது, இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தால் சாதிப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாவிட்டால், ஒடுக்கப்பட்ட சாதிகள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்ற செய்தியைத் தெரிவித்தது.
இது ஆர்எஸ்எஸ்ஸுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காங்கிரஸ் சாதியைப் பற்றிப் பேசாமல் மதச்சார்பின்மை சித்தாந்தத்துடன் இந்தியாவை நிர்வகித்தது. அனைத்துப் பல்கலைக்கழக ஆராய்ச்சி திட்டங்களும் சாதி அமைப்பு குறித்தவையாக அல்லாமல் மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டன. வி.பி. சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த முடிவெடுத்த பிறகுதான் 1990களில் சாதி இந்திய அரசியலின் மையத்திற்கு வந்தது.
காங்கிரஸ் வரலாற்றில் திருப்புமுனை Caste Census A Real Project

ராகுல் காந்தி 2024 தேர்தலின்போது சாதிக் கணக்கெடுப்பு பற்றிப் பேசியது காங்கிரஸ் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் உயர் சாதித் தலைவர்கள், ராகுலின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால், ராம்மனோகர் லோஹியா, வி.பி. சிங் ஆகியோரைக் காட்டிலும் திட்டவட்டமாக சாதி எதிர்ப்பு நிலைப்பாட்டை ராகுல் மேற்கொண்டார். 2024 தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவரான பிறகும் அவர் அந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்தார். ஆர்எஸ்எஸ்/பாஜக அவரது கோரிக்கையை ஏற்க வேண்டிய நிலை வந்திருப்பதால் காங்கிரசில் ராகுலின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நரேந்திர மோடியைச் சுற்றியுள்ள ஆர்எஸ்எஸ்/பிஜேபி உயர் சாதி சக்திகள் சாதிக் கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி குடும்பத்திலிருந்து வந்த ஒரு தலைவர் தங்களுடைய கோரிக்கையை முன்னெடுப்பதை இந்தியாவில் உள்ள ஓபிசி மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். தங்களுக்காகப் பேசும் தேசியத் தலைவராக அவரைப் பார்க்கிறார்கள்.தவிர்க்க முடியாத ஒரு சூழலை ராகுல் உருவாக்கியுள்ளார்.
தெலங்கானா அரசு சாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், 2015ஆம் ஆண்டு சித்தராமையா அரசு செய்த சாதிக் கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தப் பிரச்சினையை அந்த அளவுக்குத் தீவிரமாக முன்னெடுத்ததில் இருந்த அரசியல் ரீதியான ஆபத்தைப் பற்றி ராகுல் கவலைப்படவில்லை. பிகாரில் இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இணைந்திருந்தபோது, நிதீஷ் குமாரும் சாதிக் கணக்கெடுப்பை ஆதரித்தார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதுபோன்ற ஒரு வரலாற்றுப் பிரச்சினையை எழுப்புவதில் பாஜகவுக்குக் கடுமையான சிக்கல் இருந்தது. அது அவர்களின் சித்தாந்தத்திற்கு எதிரானது.
திடீர்த் திருப்பம் Caste Census A Real Project

மோடி அரசின் அறிவிப்புக்குப் பிறகு சாதி வரலாறு 360 டிகிரி திரும்பியுள்ளது. இந்தத் திருப்பத்திற்குப் பிறகு பாஜக அமைச்சர்களும் தலைவர்களும் காங்கிரஸை, குறிப்பாக நேருவை, ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று தாக்கி வருகின்றனர். பாஜக செய்தித் தொடர்பாளர்கள் தங்கள் அரசாங்கத்தை ஓபிசிக்கு ஆதரவாகவும், தங்களைச் சாதிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாளர்களாகவும் காட்டிக்கொள்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அண்மைக்காலம்வரை சாதிக் கணக்கெடுப்பை எதிர்த்தனர்.காங்கிரஸும் பிற பிராந்தியக் கட்சிகளும் இப்போது சாதிக் கணக்கெடுப்பு அறிவியல் அடிப்படையில் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். கணக்கெடுப்புப் படிவத்தில் சாதி என்னும் பத்தியைச் சேர்ப்பது மட்டும் போதாது.
தெலங்கானா மாநில அரசு 2025இல் மேற்கொண்ட சமூக-பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் சாதிக் கணக்கெடுப்பு ஒரு நல்ல மாதிரியை வழங்குகிறது.இந்தியாவின் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டிய வழிமுறை குறித்து தெலங்கானா, கர்நாடகம், பிகார் ஆகிய அரசாங்கங்களிடமிருந்து சாத்தியமான அனைத்துத் தகவல்களையும் சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு பத்தாண்டுக் கணக்கெடுப்பிலும்
இனி சாதிக் கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும். Caste Census A Real Project
எதிர்காலத்திற்கான சொல்லாடல் Caste Census A Real Project
என் பார்வையில், எதிர்காலத்தில் சாதி தொடர்பான விவாதம் வரலாற்று அநீதிகளைத் தீர்ப்பதற்கானது அல்ல. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் தேக்கமடைந்த அமைப்புகளை மாற்றுவதற்காக இருக்கும், இருக்க வேண்டும்.
இப்போது பாஜக, குறிப்பாக மோடி, இந்த நடவடிக்கையைத் தனது நன்மைக்காகப் பயன்படுத்த முயற்சிப்பார். காங்கிரஸ் தன் அணிகளுக்குள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எதிர்ப்பு சக்திகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2014 வரை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உயர் நிர்வாகப் பதவிகளை வகித்த பல அறிவுஜீவிகள் சாதிக் கணக்கெடுப்பை எதிர்த்தனர்.
சாதிக் கணக்கெடுப்புத் திட்டத்தையும் இட ஒடுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்குவதையும் முன்வைத்தபோது ராகுல் காந்தி உணர்ந்தது இதைத்தான். சூழ்நிலை மாறிவருவதை உணர்ந்த ஆர்எஸ்எஸ், பிஜேபி உயர் சாதித் தலைவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.இடதுசாரிக் கட்சிகளும் சாதிக் கணக்கெடுப்பை எதிர்த்தன. மனித சமத்துவம், சாதியற்ற சமூகம் என்ற கருத்தைச் சுற்றி ஓபிசிக்களை அவை அணிதிரட்டுகின்றன.
சாதிக் கணக்கெடுப்பு பற்றிய பாஜக அரசின் திடீர் அறிவிப்பு, சாதிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் கட்சிகள், அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், தனிப்பட்ட அறிவுஜீவிகள் மத்தியில் கருத்தியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.ராகுல் காந்தி மட்டும் இந்தியாவிலும் வெளியிலும் சாதி கணக்கெடுப்பு பற்றிப் பேசிக்கொண்டிருந்தவரை, அவரைப் பைத்தியம் என்று நினைத்தார்கள். ஆட்சி நடத்துவதற்கும் தலைமை ஏற்பதற்குமான குணங்கள் இல்லாத மனிதர் என்று பலர் அவரை விமர்சித்தார்க்ள்.
ஆனால் இப்போது அவர் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துபவராகக் காணப்படுகிறார். இருப்பினும், மண்டல் கமிஷன் அமலாக்கத்திற்குப் பிறகு ஓபிசி மக்களிடையே ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் இந்த நிகழ்வுகள் நடந்திருக்காது. படித்த ஓபிசி இளைஞர்களும் தலைமையும் வரலாற்றின் போக்கை மாற்றியுள்ளனர்.பாஜக அரசு உண்மையிலேயே சாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமா அல்லது அது வெறும் கண்துடைப்பு அறிவிப்பாகவே இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளத் தலைவர்கள், பிராமண சாதுக்கள் போன்றோர் ஆர்எஸ்எஸ் இதை ஒருபோதும் அனுமதிக்காது என்று நம்பினார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ்/பாஜகவை ஆதரிக்கும் ஏகபோக அமைப்புகள்கூட, ஆர்எஸ்எஸ் சாதிக் கணக்கெடுப்பை நடக்க அனுமதிக்காது என்பதால் ராகுலின் இயக்கம் தோல்வியடையும் என்று நினைத்தன.
ஆனால் இன்று அது நிஜமாகியிருக்கிறது. Caste Census A Real Project
காஞ்சா இல்லயா ஷெப்பர்ட் Caste Census A Real Project
அரசியல் கோட்பாட்டாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர் . தெலங்கானா அரசு, தன் சாதிக் கணக்கெடுப்புத் தரவுகளையும் சமூக நீதி நிர்வாகத்திற்கு அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் ஆய்வு செய்வதற்காக அமைத்த சுயாதீன நிபுணர் குழுவின் துணைத் தலைவர். Caste Census A Real Project
நன்றி: தி வயர் இணைய இதழ் Caste Census A Real Project
தமிழில்: தேவா