பாலசுப்ரமணியம் சிதம்பரம் என்ற தமிழர் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது பெற்றோர் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்றுள்ளனர். பாலசுப்ரமணியம் சிங்கப்பூரில் கடந்த 21 ஆண்டுகளாக திட்டப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு, சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் உள்ள முஸ்தபா ஜூவல்லரிக்கு சென்றார்.
அங்கு அவர் தனது மனைவிக்கு ரூ. 3.7 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை வாங்கினார். 15,570 ரூபாய்க்கு மேல் நகை வாங்கினால் அவர்கள் முஸ்தபா ஜுவல்லரி நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும். பாலசுப்ரமணியமும் ஜாக்பாட்டுக்கு தகுதி பெற்றிருந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நடந்த குலுக்களில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாகப் பெற்றார். இதன் இந்திய மதிப்பு, ரூ.8.5 கோடி ஆகும்.
இது குறித்து பாலசுப்ரமணியம் கூறுகையில் , “எனது தந்தையின் நான்காவது நினைவு தினத்தன்று இந்த பரிசு கிடைத்துள்ளது. இந்த பரிசை அவரது ஆசீர்வாதமாக கருதுகிறேன். இந்தத் தகவலை அம்மாவிடம் தெரிவித்த போது, மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். பரிசுத் தொகையில் ஒரு பகுதியை சிங்கப்பூரில் நான் தங்கியுள்ள பகுதியின் வளர்ச்சிக்காக வழங்க உள்ளேன்” என்றார்.
சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் முஷ்தபா சென்டரில் முஸ்தபா ஜூவல்லரி இயங்கி வருகிறது. 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஜூவல்லரி இந்திய பாராம்பரிய நகைகளை விற்பனை செய்கிறது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்களிடத்தில் முஸ்தபா ஜூவல்லரி மிகுந்த பாப்புலரான நிறுவனம் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
வெள்ள பாதிப்பு : நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்… எவ்வளவு தெரியுமா?
கும்பமேளா: 5 நட்சத்திர டெண்டில் தங்க ஒரு நாள் ரேட் எவ்வளவு தெரியுமா?