சென்னை வானிலை ஆய்வு மையம், ஜிஎஸ்டி அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
டெல்லி முதல் சென்னை வரை நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 22) சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கும், ஜிஎஸ்டி அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும், வானிலை ஆய்வு மையத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரிலும் இரு அலுவலகத்தின் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையடுத்து போலீசாரும், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களும் சம்பவ இடங்களுக்கு சென்று அங்கு பணியாற்றும் ஊழியர்களை வெளியேற்றிவிட்டு மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் இல்லை. வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் புரளி என தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் (செப்டம்பர் 20) இரவு, மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, சோதனை மேற்கொண்டனர். அன்றைய தினம் மாலை மும்பை – தாய்லாந்து இடையே இயக்கப்பட்ட இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இந்த மாதம் மட்டும் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளது.
இந்த மாதம் தொடக்கத்தில் கோவை ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இப்படி அடிக்கடி மிரட்டல் வரும் நிலையில், யார் இப்படி அனுப்புகிறார்கள்… எங்கிருந்து வருகிறது என்ற விவரங்களை கண்டுபிடிக்க முடியாததால் போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னை மட்டுமல்ல இன்று டெல்லியில் செயல்பட்டு வரும் பிரபல பள்ளிகளான டிபிஎஸ் துவாரகா, கிருஷ்ணா மாடல் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்டவற்றுக்கும் மிரட்டல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.