மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக நாகை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
2026 தேர்தலை முதல்முறையாக எதிர்கொள்ளும் விஜய் இன்று (செப்டம்பர் 20) தனது இரண்டாவது பிரச்சாரத்தை நாகையில் தொடங்கினார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய விஜய், “மீனவர்களின் நண்பராக நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன். கப்பலில் வந்திறங்கும் பொருட்களை எல்லாம் விற்பதற்காக அந்த காலத்தில் அந்தி கடைகள் எல்லாம் நாகையில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மீன் பிடி தொழில், விவசாயம் என எந்த பக்கம் திரும்பினாலும், உழைக்கக்கூடிய மக்கள் இருக்கும் ஊர்தான் நம்ம நாகப்பட்டினம்.
மதவேறுபாடு இல்லாத, அனைவருக்கும் பிடித்துபோன மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக மக்கள் வாழும் ஊர் நாகை.
தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டவாது இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் ஹார்பர் தான். ஆனால் அங்கு நவீன வசதிகளுடன் மீன்களை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் இல்லாமல், அதிக குடிசை பகுதிகள் உள்ள ஊரும் நாகப்பட்டினம் தான்.
இப்படிபட்ட நிலையில், இந்த முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சிதான் சாட்சி என்று அடுக்கு மொழியோடு பேசுபவர்களின் பேச்சை கேட்டு கேட்டு நமது காதில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். இவர்கள் ஆண்டது பத்தாதா?
நமது மக்கள் தவியாக தவிக்கிறார்கள்… அது இவர்களுக்கு பத்தாதா?
இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவது பற்றியும், அதற்கான காரணம் தீர்வை பற்றியும் மதுரை மாநாட்டில் பேசியிருந்தேன். அதுஒரு தப்பா?
மீனவர்கள் பக்கம் நிற்பதும்… அவர்களுக்கு குரல் கொடுப்பதும் நமது உரிமை, கடமை. நான் என்ன இன்று நேற்றா மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறேன்.
இதே நாகப்பட்டினத்தில் 14 வருடத்துக்கு முன் 2011ல் பிப்ரவரி 22ஆம் தேதி, மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இதே நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்தினோம்.
இந்த விஜய் களத்துக்கு வருவது புதிது இல்லை கண்ணா… எப்போதோ வந்தாச்சு… என்ன முன்பெல்லாம் விஜய் மக்கள் இயக்கமாக வந்து நிற்போம். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம்
எப்போதும் மக்களோடு மக்களாகத்தான் நிற்பேன். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
மீனவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய இதேசமயத்தில் நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் இலங்கை உட்பட எந்த நாடுகளில் இருந்தாலும் தாய் பாசம் காட்டின தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்கும் குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை இல்லையா…
மீனவர்களோடு உயிர் எந்த அளவுக்கு முக்கியமோ… அதே அளவுக்கு நம்முடைய ஈழ தமிழர்களின் வாழ்க்கையும் அவர்களது கனவுகளும் முக்கியம்.
மீனவர்கள் படும் கஷட்டத்தை பார்த்து பெரிதாக ஒரு கடிதத்தை எழுதிவிட்டு… அதன்பிறகு கப்சிப் என அமைதியாக போறதுக்கு நாம் ஒன்றும் கபட நாடக திமுக அரசும் கிடையாது.
மற்ற மீனவர்கள் என்றால் இந்திய மீனவர்கள்… நம்முடைய மீனவர்கள் என்றால் தமிழக மீனவர்கள் என பிரித்து பார்க்க பாசிச பாஜகவும் கிடையாது. நிரந்திரமான தீர்வு என்பதுதான் தவெகவின் முக்கிய அஜெண்டா” என்று கூறினார்.