பிரதமர், மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் பதவியில் இருந்து நீக்கும் சட்ட மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆகஸ்ட் 20-ந் தேதி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மக்களவையில் இந்த மசோதாவின் நகலை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கிழித்து அமித்ஷா முன்பாக வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று 3 மசோதாக்களைத் தாக்கல் செய்தார். அரசியல் அமைப்பு திருத்தம் (130 வது பிரிவு), ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா ஆகியவற்றை அமித்ஷா தாக்கல் செய்தார்.
இதில் அரசியல் அமைப்பு திருத்தம் (130வது பிரிவு) மசோதா என்பது பிரதமர்- முதல்வர் மற்றும் அமைச்சர்கள் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டால் 31-வது நாளில் அவர்களது பதவிகளை பறிக்க வகை செய்யக் கூடியது. இதனால் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’ எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
அப்போது இந்த சர்ச்சைக்குரிய மசோதாவின் நகல்களை கிழித்து அமித்ஷா முன்பாக வீசினர். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவு ஆய்வுக்கு அனுப்புவதாக அமித்ஷா அறிவித்தார். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் சர்ச்சைக்குரிய இந்த மசோதா குறித்து அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகள்:
சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன்: நேற்று மாலை உள்துறை அமைச்சகத்தால் மக்களவை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டு இன்றே மக்களவையில் தாக்கல் செய்யப்படும் அரசியலமைப்பின் 130 ஆவது திருத்தத்தை கோரும் சட்ட மசோதா இந்திய ஜனநாய கட்டமைப்பின் மீது தொடுக்கப்படும் மற்றும் ஒரு கொடிய தாக்குதல்.
காங்கிரஸ் எம்.பி. வம்சி கிருஷ்ணா: அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பாஜக எப்படி பகடைக்காயாக பயன்படுத்துகிறது என்பதை நாடு பார்த்து கொண்டுதான் இருக்கிறது. அமலாக்கத்துறை இதுவரை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது 179 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால் 2 பேருக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டமானது ஜனநாயகத்துக்கு எதிரானது. நாட்டின் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க போராடுவோம் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இந்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி முகமது பஷீர்: அடிப்படையான சட்டங்களுக்கே எதிரானது இப்புதிய சட்டம். அப்பட்டமான உள்நோக்கம் கொண்டது இந்த சட்டம். மத்திய அரசின் இப்புதிய சட்டம் தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்துவர்.
ஆர்.எஸ்.பி. எம்.பி. பிரேமசந்திரன்: இந்த சட்டம் மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்களை மட்டுமே குறிவைக்கிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் முயற்சி இது. அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் எப்படி செயல்படுகிறது என்பதை நாடறியும். இதை ஏற்க முடியாது. நிச்சயமாக கடுமையாக எதிர்ப்போம்.
