BIHAR ELECTION 2025 -தொடர் பின்னடைவு : வெற்றி பெறுவாரா தேஜஸ்வி?

Published On:

| By Kavi

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் , மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பிறகு பீகார் மாநிலத்தில் கடந்த நவம்பர் 6, 11ஆகிய இரு தேதிகளில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆண்கள் 62.98%, பெண்கள் 71.78%. என மொத்தமாக 67.13% சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநிலத்தில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் கூறியிருந்தது.

ADVERTISEMENT

பாஜக – ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய என்.டி.ஏ மற்றும் காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாபந்தன் கூட்டணிக்கும் இடையே நீயா நானா போட்டி நிலவியது.

இதில் குறிப்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவின் தொகுதி முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (நவம்பர் 14) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தேஜஸ்வி பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதுவும், அவரது குடும்ப கோட்டையான ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வில் வெற்றி வாய்ப்பை இழக்கும் சூழலில் இருப்பது ஆர்ஜேடி கட்சியினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில், தேஜஸ்வி யாதவின் தந்தையும் ஆர்ஜேடி நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது தாயார் ராப்ரி தேவி ஆகியோர் இந்தத் தொகுதியைத் தக்கவைத்தனர்.

ADVERTISEMENT

ராகோபூர் தொகுதி, கங்கை நதியின் குறுக்கே உள்ள யாதவர்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாகும். இதில் லாலு பிரசாத் 1995, 2000 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றார். அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி 2005ல் வெற்றி பெற்றார்.

2010ல் ராப்ரி தேவியை பாஜக வேட்பாளர் சதிஷ் குமார் யாதவ் தோற்கடித்தார். 2015ல் இந்த தொகுதியில் முதல் முறையாக தனது 26 வயதில் களம் இறங்கினார் தேஜஸ்வி யாதவ். தனது அம்மாவை தோற்கடித்த பாஜக வேட்பாளர் சதிஷ் குமாரை, 12.25சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இளம் வயதில் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

தொடர்ந்து 2020 தேர்தலிலும் தேஜஸ்வி மற்றும் சதீஷ் குமார் இடையே கடும் போட்டி நிலவியது. அப்போது 2015 தேர்தலைக் காட்டிலும் கூடுதல் வாக்குவித்தியாசத்தில் அதாவது 19.10 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் சதீஷ் குமாரை தோற்கடித்தார்.

இந்தசூழலில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போது 15ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேஜஸ்வி 9705 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள பாஜக வேட்பாளர் சதிஷ் குமார் யாதவ் 65411 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். தேஜஸ்வி 55706 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இன்னும் 15 சுற்று வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. என்றாலும் இருவருக்கும் இடையேயான வாக்குகள் வித்தியாசம் பாஜகவுக்கு சாதகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்படி பாஜக 95, ஜேடி(யு) 85, ஆர்ஜேடி 24, லோக் ஜனசக்தி -19, ஏஐஎம்ஐஎம் – 6, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா -5, ராஷ்டிய லோக் மோர்ச்சா -4, மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்- 2, காங்கிரஸ் -1, சிபிஐ(எம்)-1, பகுஜன் சமாஜ்- 1 இடத்தில் முன்னிலையில் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share