பீகாரில் 2000-ம் ஆண்டு முதல் 9 முறை முதல்வராக பதவி வகித்த நிதிஷ்குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மூலம் 10-வது முறையாக மீண்டும் முதல்வராகிறார். ஆனால் பீகார் முதல்வர் நாற்காலியில் இத்தனை முறை அமர்ந்த காலத்தில் சட்டமன்ற தேர்தலில் ஒருமுறை கூட போட்டியிடவே இல்லை நிதிஷ்குமார்.
1995-ம் ஆண்டுதான் பீகார் சட்டமன்ற தேர்தலில் கடைசியாக நிதிஷ்குமார் போட்டியிட்டார். அப்போது நாளந்தா மாவட்டம், ஹர்னாத் சட்டமன்ற தொகுதியில் சமதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வென்றார் நிதிஷ்குமார். அதற்கு முன்னர் 1985-ல் இதே தொகுதியில் லோக் தள் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் நிதிஷ்குமார்.
நிதிஷ்குமார் போட்டியிட்ட சட்டமன்ற தேர்தல்களந்
- 1977-ல் ஜனதா கட்சி சார்பில் ஹர்னாத் தொகுதியில் போட்டியிட்ட நிதிஷ்குமார், காங்கிரஸின் போலா சிங்கிடம் தோல்வி அடைந்தார்.
- 1980-ல் மீண்டும் ஹர்னாத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு காங்கிரஸின் போலா சிங்கிடமே 2-வது முறையாக தோல்வி அடைந்தார்.
- 1985-ல் ஹர்னாத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- 1995-ல் மீண்டும் ஹர்னாத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற போது அப்போது எம்.பி.யாகவே தொடர விரும்பியதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
5 முறை மக்களவை எம்பி
Barh மக்களவை தொகுதியில் 1989, 1991, 1996, 1998, 1999 தேர்தல்களில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று எம்.பியாக பதவி வகித்தார் நிதிஷ்குமார்.
நிதிஷ்குமார் முதல்வர் பதவி
- முதல் முறை: மார்ச் 3, 2000 – மார்ச் 10, 2000 (மிகக் குறுகிய 7 நாட்கள்)
- 2-வது முறை: நவம்பர் 24, 2005 – மே 20, 2014 (சுமார் ஒன்பது ஆண்டுகள்)
- 3- முறை: பிப்ரவரி 22, 2015 – நவம்பர் 20, 2015 (ஜிதன் ராம் மாஞ்சிக்கு பிறகு மீண்டும் முதல்வர் ஆனார்)
- 4-வது முறை: நவம்பர் 20, 2015 – ஜூலை 26, 2017 (2015 பீகார் சட்டசபைத் தேர்தலில் மகாபந்தன் கூட்டணியின் வெற்றியின் பின்னர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.)
- 5-வது முறை: ஜூலை 27, 2017 – நவம்பர் 16, 2020 (ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) மீண்டும் இணைந்து முதல்வரானார்.)
- 6-வது முறை: நவம்பர் 16, 2020 – ஆகஸ்ட் 9, 2022 (2020 பீகார் சட்டசபைத் தேர்தலில் NDA கூட்டணியின் வெற்றியின் பின்னர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.)
- 7-வது முறை: ஆகஸ்ட் 10, 2022 – ஜனவரி 28, 2024 (NDA உடனான உறவைத் துண்டித்துவிட்டு மீண்டும் மகாபந்தனுடன் இணைந்தார்.)
- 8-வது முறை: ஜனவரி 28, 2024 – ஜனவரி 30, 2024
- 9-வது முறை: ஜனவரி 31, 2024 – தற்போது வரை (தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (NDA) இணைந்து மீண்டும் பதவியேற்று, தற்போது முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.)
தேர்தலில் போட்டியிடவில்லை
பீகார் மாநிலத்தில் 9 முறை முதல்வராக பதவி வகித்த நிதிஷ்குமார், இப்பதவி காலத்தில் ஒரு முறை கூட சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை; பீகார் மாநில சட்டமேலவை (MLC) உறுப்பினராகவே இருந்து முதல்வர் நாற்காலியில் 9 முறையும் அமர்ந்தவர் நிதிஷ்குமார்.
10-வது முறையாக
தற்போதைய தேர்தலிலும் நிதிஷ்குமார் போட்டியிடவில்லை. பீகார் சட்டமேலவை உறுப்பினராக இருப்பதால் நிதிஷ்குமார் மீண்டும் 10-வது முறையாக தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
